

இதுகுறித்து வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தற்கொலைக்குத் தூண்டியதாக மதுரை கீரைத்துரை மேலத்தோப்பைச் சேர்ந்த ஜி.என்.அன்புசெழியன்(வயது 50) மீது குற்றம் சாட்டி, அவரை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் தனக்கு முன்ஜாமீன் வழங்க கோரி ஐகோர்ட்டில் அன்புசெழியன் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
இந்த வழக்கில் என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் எதுவும் உண்மை இல்லை. நான் எந்த தவறும் செய்யவில்லை. பி.அசோக்குமாருக்கும் எனக்கும் எந்தவித நேரடி தொடர்போ, மறைமுக தொடர்போ இல்லை.
சசிக்குமார் நடித்த ‘தாரை தப்பட்டை’ படத்திற்காக நான் நிதியுதவி செய்தேன். அந்த படம் நஷ்டமடைந்தது. அதேநேரம் நான் கொடுத்த கடன் தொகையை திருப்பிக்கேட்டேன். அதற்கு அவர் தரப்பினர், கொடிவீரன் படம் மூலமாக கிடைக்கும் வருமானத்தை கொண்டு கடனை திருப்பி அடைப்பதாக கூறினார்கள்.
இந்நிலையில் நான் அவர்களிடம் வட்டிக்கு மேல் வட்டி கேட்டதாகவும், தரவில்லை என்றால் அவர்கள் வீட்டுப் பெண்களை தூக்கி விடுவேன் எனக்கூறி மிரட்டியதாகவும் என் மீது உண்மைக்கு புறம்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த 30 ஆண்டுகளாக சினிமா துறையினருடன் எனக்கு நெருங்கிய அனுபவமும், நல்ல தொடர்பும் உள்ளது. திரைத்துறையில் நஷ்டமடைந்த பலர் என்னால் தான் முன்னுக்கு வந்துள்ளனர். ஒரு படத்திற்கு நிதியுதவி செய்வதும், அந்த படம் திரையிடுவதற்கு முன்பாக கொடுத்த கடனையும், வட்டியையும் சேர்த்து வசூலிப்பது என்பது வழக்கமான ஒன்று தான். ஆனால் அவர்கள் கூறியது போல வட்டிக்கு மேல் வட்டி போட்டு வசூலிப்பது இல்லை.
அசோக்குமாரின் தற்கொலைக்கு நான் காரணம் இல்லை. எனவே எனக்கு முன்ஜாமீன் வழங்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி ஆதிநாதன் முன்பு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
இதற்கிடையே அன்புசெழியனுடன் சென்னை ஜாபர்கான்பேட்டையில் உள்ள அவரது கட்டுமான நிறுவனத்தின் மானேஜர் முத்துக்குமார் என்பவர் தொடர்பு கொண்டு பேசுவதாக தெரியவந்தது. இதையடுத்து நேற்று முத்துக்குமாரை போலீசார் அழைத்துச் சென்று ரகசிய இடத்தில் வைத்து, அவரிடம் அன்புசெழியன் பதுங்கி இருக்கும் இடம் குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.