திரையுலகை விட்டு விலக நினைத்தேன் - விக்ரம்

ஆரம்ப காலகட்டங்களில் படங்கள் நன்றாக போகாததால் திரையுலகை விட்டு விலகிவிட முடிவு செய்து இருந்தாக நடிகர் விக்ரம் கூறியுள்ளார்.
விக்ரம்
விக்ரம்
Published on

விக்ரம், அக்‌ஷரா ஹாசன் நடித்துள்ள ‘கடாரம் கொண்டான்’ படம் தெலுங்கில் ‘மிஸ்டர் கே கே’ என்ற பெயரில் வெளியாகிறது. இதையொட்டி ஐதராபாத்தில் நடந்த விழாவில் இருவரும் கலந்துகொண்டனர். அப்போது விக்ரம் கூறியதாவது:-

“மணிரத்னம் எனது கனவு இயக்குனர். விரைவில் அவரது டைரக்‌ஷனில் சரித்திர படமொன்றில் நடிக்கிறேன். சேதுவில் நடித்தபோது மெலிய வேண்டும் என்றனர். அதற்காக ஒரு சப்பாத்தி, ஒரு அவித்த முட்டை, கேரட் ஜூஸ் மட்டும் சாப்பிட்டேன். படப்பிடிப்பு தளத்துக்கு 8 கிலோமீட்டர் நடந்தே சென்றேன்.

கல்லூரி நாட்களில் நண்பனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்தில் சிக்கி 4 ஆண்டுகள் எனக்கு 23 அறுவை சிகிச்சைகள் நடந்தன. எனது வாழ்க்கையை சேதுவுக்கு முன்னால் சேதுவுக்கு பின்னால் என்று பிரிக்கலாம். சேதுவுக்கு முன்பு எனது படங்கள் நன்றாக போகவில்லை. எனவே சேது தோற்றால் சினிமாவை விட்டு விலகிவிட முடிவு செய்து இருந்தேன்.

ஆனால் அந்த படம் கொடுத்த வெற்றியால் இன்னும் நான் உற்சாகமாக சினிமாவை நோக்கி ஓடிக்கொண்டே இருக்கிறேன். கடாரம் கொண்டான் பாடல் வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் என்னை பாராட்டி பேசினார். அதை கேட்டு கண்கலங்கி விட்டேன். எனது ஒவ்வொரு படமும் ரசிகர்களிடம் சேர வேண்டும். நல்ல வசூல் பார்க்க வேண்டும் என்று உழைக்கிறேன். இவ்வாறு விக்ரம் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com