நடிகர் சங்க துணைத்தலைவர் பதவியிலிருந்து நடிகர் பொன்வண்ணன் ராஜினாமா

விஷாலின் அரசியல் பிரவேசத்தால் நடிகர் சங்க துணைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக நடிகர் பொன்வண்ணன் நடிகர் சங்கத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
நடிகர் சங்க துணைத்தலைவர் பதவியிலிருந்து நடிகர் பொன்வண்ணன் ராஜினாமா
Published on

நடிகர் சங்க தேர்தலில் விஷால் தலைமையிலான அணி வெற்றி பெற்றதையடுத்து, நடிகர் சங்க தலைவராக நாசரும், பொதுச் செயலாளராக விஷாலும் பதவியேற்றனர். 

மேலும் துணைத்தலைவராக பொன்வண்ணன், பொருளாளராக கார்த்தி உள்ளிட்ட விஷால் அணியினர் பொறுப்பேற்றுக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து விஷால் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு, அதிலும் வெற்றி பெற்று தயாரிப்பாளர் சங்கத்திற்கும் தலைவரானார். 

இந்நிலையில், ஜெயலலிதா மறைவையடுத்து காலியாக இருக்கும் ஆர்.கே.நகருக்கு டிசம்பர் 21-ல் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் போட்டியிடப்போவதாக விஷால் திடீரென அறிவித்து வேட்பு மனுவையும் தாக்கல் செய்தார். ஆனால் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. விஷாலின் அரசியல் பிரவேசத்திற்கு சேரன் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் சிலரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்திலும் ஈடுபட்டனர். தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு விஷால் தேர்தலில் நிற்கும்படியும் அவர்கள் வலியுறுத்தினர். 

இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைத் தலைர் பதவியில் இருந்து விலகுவதாக பொன்வண்ணன் நடிகர் சங்கத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிட விண்ணப்பித்தது நமது கொள்கைக்கு முரண்பாடான செயல். நடிகர் சங்கம் அரசியல் சார்பற்று செயல்பட வேண்டும் என நாம் எடுத்த முடிவின் படி விஷால் செயல்படாதது அதிர்ச்சி அளிக்கிறது என பொன்வண்ணன் கடிதத்தில் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. 

பதவிக் காலத்தை முடிக்காமல் விலகுவதில் வருத்தமிருந்தாலும், இந்நிலைக்கு தான் தள்ளப்பட்டுள்ளதாக பொன்வண்ணன் வருத்தம் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. 

அவரது ராஜினாமா கடிதத்தை நடிகர் சங்கம் இதுவரை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும், பதவியில் தொடர அவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. 

பொன்வண்ணன் பதவி விலகும் பட்சத்தில் துணைத் தலைவர் பதவிக்கு மீண்டும் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. 

பொன்வண்ணனின் இந்த முடிவுக்கு சேரன் வரவேற்பு தெரிவித்துள்ளார். விஷாலின் நடவடிக்கையால் ராஜினாமா என்ற பொன்வண்ணன் கூறியிருப்பதை வரவேற்கிறேன். இளைஞர் என்பதால் மட்டும் அரசியலில் போட்டியிட முடியாது, அனுபவமும் தேவை. விஷால் அரசியலுக்கு வருவதை தான் எதிர்க்கவில்லை, இன்னும் தன்னை வளர்த்துக்கொண்டு விஷால் அரசியலில் ஈடுபடலாம் என்று சேரன் கருத்து தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com