இந்திய நிறுவனம் தயாரித்த முதல் எலக்ட்ரிக் பைக் - 10,000 வாடிக்கையாளர்களுக்கு சலுகை

புதிய மின்சார எலக்ட்ரிக் வரிசையில் EX1, EX2 மற்றும் EX2S என மூன்று மாடல்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன.
India's Avore EV Electric Bike Launch
Avore EX1, EX2, EX2S priced with introductory offer and low booking cost
Published on

குஜராத்தை தலைமையிடமாக கொண்ட EV ஸ்டார்ட்அப் நிறுவனமான அவோர் எலக்ட்ரிக், தனது முதல் தயாரிப்பு வரிசையான EX சீரிஸை அறிமுகப்படுத்தி இந்திய மின்சார மோட்டார் சைக்கிள் பிரிவில் நுழைந்துள்ளது. இந்த புதிய வரிசையில் EX1, EX2 மற்றும் EX2S என மூன்று மாடல்கள் உள்ளன.

EX1 மின்சார பைக்

ஆரம்ப நிலை EX1 மாடல் 3.24 kWh பேட்டரி பேக்கைப் பயன்படுத்துகிறது. மேலும் இதன் IDC ரேஞ்ச் 160 கி.மீ. அம்சத்துடன் வடிமைக்கப்பட்டுள்ளது.

இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 100 கி.மீ. எனக் கூறப்படுகிறது. மேலும் இது 3.2 வினாடிகளில் 0-40 கி.மீ. வேகத்தை எட்டும் திறன் கொண்டது.

இதில் 7-இன்ச் செக்மென்டட் டிஸ்ப்ளே, LED விளக்குகள், நான்கு ரைடிங் மோட்கள், ஆன்-போர்டு சார்ஜர் மற்றும் 4G, ப்ளூடூத், GPS, Wi-Fi போன்ற இணைப்பு வசதிகள் உள்ளன. இதன் பேட்டரிக்கு ஐந்து வருட வாரண்டி வழங்கப்படுகிறது.

EX2 மின்சார பைக்

இதையடுத்து EX2 மாடலில், பெரிய 5 kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது, 255 கி.மீ. வரை மைலேஜ் தரும் வகையில் சந்தைக்கு விற்பனைக்கு வர உள்ளது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 100 கி.மீ. ஆகவே உள்ளது.

இதில் 7-அங்குல டிஜிட்டல் டிஸ்ப்ளே, LED ஹெட்லைட், நான்கு ரைடிங் மோட்கள் மற்றும் சுமார் இரண்டு மணி நேரத்தில் பேட்டரியை 20 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்யக்கூடிய ஆன்-போர்டு சார்ஜர் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

EX1 மாடலைப் போலவே, இதிலும் 4G இணைப்பு, புளூடூத், GPS, Wi-Fi, டிஸ்க் பிரேக்குகளுடன் கூடிய CBS மற்றும் ஐந்து வருட பேட்டரி வாரண்டி ஆகிய வை உள்ளன.

EX2S மின்சார பைக்

முதன்மை மாடலான EX2S, இந்த வரிசையிலேயே மிகவும் சக்திவாய்ந்த செயல்திறனை வழங்குகிறது. இது அதே 5 kWh பேட்டரியைப் பயன்படுத்துகிறது. ஆனால் 260 கி.மீ. தூரம் வரை செல்லும் என IDC முறையில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 114 கி.மீ. ஆக அதிகரிக்கிறது. 0-40 கி.மீ. வேகத்தை 2.8 வினாடிகளில் எட்டும் என நிறுவனம் உறுதியளிக்கிறது.

மேலும், இதில் AI செயல்பாடுகளுடன் கூடிய 7-அங்குல டிஸ்ப்ளே, ஆறு ரைடிங் மோட்கள் மற்றும் ஆன்-போர்டு சார்ஜரைப் பயன்படுத்தி 20 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் ஆகும் அதே இரண்டு மணி நேர வசதியும் உள்ளது.

இந்தத் தொடர் முழுவதும், ஒருங்கிணைந்த மோட்டார் மற்றும் ஸ்விங்ஆர்ம் அமைப்பு, சாதாரண வீட்டு சாக்கெட்டுகளில் இயங்கும் 1,500W ஆன் - போர்டு சார்ஜர், மற்றும் அரிய-பூமி தனிமங்கள் இல்லாத நிரந்தர காந்த ஒத்திசைவு மோட்டார் உள்ளிட்ட பல தொழில்நுட்பங்களை அவோர் அறிமுகப்படுத்தியுள்ளது.

EX2S மற்றும் EX2 ஆகியவை 10.5 kW வரையிலான உச்சபட்ச சக்தியை உற்பத்தி செய்வதாகவும், அதே நேரத்தில் மூன்று வகைகளும் 250 Nm உச்சபட்ச சக்கர முறுக்குவிசையை உருவாக்குவதாகவும் அந்நிறுவனம் கூறுகிறது.

இந்த மோட்டார் சைக்கிள்களில், AVORE SENSE இயக்க முறைமை, AVA வாகன உதவி, Avore Synapse எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் துணைச் செயலி, மேனுவல் கியர் மோட், பார்க் அசிஸ்ட் மற்றும் தானியங்கி இண்டிகேட்டர் கட்-ஆஃப், கைடு-மீ-ஹோம் லைட்ஸ் உள்ளிட்ட பல வசதி அம்சங்கள் போன்ற பிரத்யேக மென்பொருள் மற்றும் இணைக்கப்பட்ட தொழில்நுட்பங்களும் இடம்பெற்றுள்ளன.

விலை மற்றும் சலுகை

இவற்றின் அறிமுக மாடலின் விலை எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ. 1.24 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. EX2 மாடலின் விலை ரூ. 1.49 லட்சமாகவும், EX2S மாடலின் விலை ரூ. 1.69 லட்சமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த அறிமுகச் சலுகை முதல் 10,000 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகைக்கு பிறகு அதன் ஆரம்ப விலை ரூ. 1.34 லட்சமாக உயரும் என தகவல் வெளியாகியுள்ளது.

முன்பதிவுகள் ரூ.799-க்கு தொடங்கியுள்ள நிலையில், சுமார் இந்த மின்சார வாகனங்களின் விற்பனை இரண்டு மாதங்களில் விற்பனைக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com