search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்கா: சட்டவிரோதமாக தங்கியிருந்த 21 பேர் கைது - இந்தியர்கள் இருக்கலாம் என தகவல்
    X

    அமெரிக்கா: சட்டவிரோதமாக தங்கியிருந்த 21 பேர் கைது - இந்தியர்கள் இருக்கலாம் என தகவல்

    அமெரிக்கா முழுவதும் உள்ள செவன் லெவன் எனும் வணிக நிறுவனத்தில் அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் சட்டவிரோதமாக தங்கியிருந்து வேலை பார்த்த 21 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் டிரம்ப் அதிபராக பதவியேற்ற பின்னர், அந்நாட்டில் குடியுரிமை இல்லாத வெளிநாட்டவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தனர். குறிப்பாக அகதிகளாக வந்தவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்து தற்போது படிப்படியாக விலக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் சூப்பர் மார்க்கெட்களை இயக்கிவரும் செவன் லெவன் நிறுவனத்தின் கீழ் இயங்கும் கடைகளில், நேற்று, குடியுரிமை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். நியூயார்க், மேரிலாண்ட், நியூ ஜெர்சி மற்றும் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள கடைகளில் இந்த சோதனை நடந்தன.

    இதில், சட்டவிரோதமாக தங்கியிருந்து பணியாற்றிய 21 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இதில், சில இந்தியர்களும் அடக்கம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், கைதானவர்கள் குறித்த தகவல்களை அதிகாரிகள் வெளியிடவில்லை. கைது செய்யப்பட்ட அனைவரும் நாடு கடத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

    வெளிநாடுகளில் இருந்து வேலைக்காக ஆட்களை எடுக்கும் நிறுவனங்கள் பணிக்காலம் முடிந்தாலும், அவர்களை திரும்ப அனுப்பாமல் சட்டவிரோதமாக தங்க வைத்துள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடந்ததாக குடியுரிமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கடைகளில் பணியாற்றும் ஊழியர்களை அந்தந்த கிளை நிறுவனங்களே தேர்ந்தெடுப்பதாகவும், அதற்கான சுதந்திரம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக செவன் லெவன் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
    Next Story
    ×