search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லையில் பழக்கடை அதிபர் மனைவியை வெட்டி 200 பவுன் நகைகள் கொள்ளை
    X

    நெல்லையில் பழக்கடை அதிபர் மனைவியை வெட்டி 200 பவுன் நகைகள் கொள்ளை

    நெல்லையில் வீடு புகுந்து பழக்கடை அதிபர் மனைவியை அரிவாளால் வெட்டி 200 பவுன் நகைகளை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
    நெல்லை:

    நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் பெருமாள் வடக்கு ரதவீதியை சேர்ந்தவர் தங்கதுரை. பல்வேறு இடங்களில் பழக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி காந்திமதி (வயது 35). இவர் நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்தார்.

    அப்போது மர்ம நபர்கள் 2 பேர் காந்திமதி வீட்டில் புகுந்து அவரை கட்டி போட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் ஆத்திரம் அடைந்த அவர்கள், காந்திமதி கையில் அரிவாளால் வெட்டினர். மேலும் வாயில் துணி வைத்து அடைத்தனர்.

    பின்னர் காந்திமதியை மிரட்டி பீரோ சாவியை வாங்கி அதில் இருந்த 200 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்தனர். அதைத் தொடர்ந்து கொள்ளையர்கள் வீட்டுக்கு வெளியே வந்து கதவை வெளிப்புறமாக பூட்டி விட்டு தப்பி சென்றனர்.

    இதனால் செய்வது அறியாமல் தவித்த காந்திமதி, வீட்டின் பின்பக்க வாசல் வழியாக வெளியே வந்து சத்தம் போட்டார். அவருடைய சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து காந்திமதியை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இந்த கொள்ளை சம்பவம் குறித்து தகவல் அறிந்த நெல்லை டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது மர்ம நபர்கள் உஷாராக அந்த வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் காட்சிகளை சேமித்து வைக்கும் கருவியை துண்டித்து சென்றது தெரியவந்தது. மேலும் வீட்டில் இருந்து சத்தம் வெளியே கேட்காமல் இருக்க டி.வி.யை அதிக சத்தமாக வைத்து உள்ளனர்.

    இதனால் அதே தெருவில் உள்ள ஒரு பழக்கடையின் வெளியே பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் மர்ம நபர்கள் உருவம் பதிவாகி இருந்தது. அதை வைத்து மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×