search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவில்பட்டியில் நகைக்காக அழகு நிலைய பெண் கொலை
    X

    கோவில்பட்டியில் நகைக்காக அழகு நிலைய பெண் கொலை

    கோவில்பட்டியில் நகைக்காக அழகு நிலைய பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஆழ்வார் தெருவைச் சேர்ந்தவர் முருகராஜ் (வயது 60). வேளாண்மை துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி அம்பிகா (48). இவர் கருப்பசாமி தெருவில் அழகு நிலையம் நடத்தி வந்தார்.

    இவரது அழகு நிலையம் அருகில் கோவில்பட்டி ஊரணி தெருவைச் சேர்ந்த குருலெட்சுமி (35) என்பவர் பூக்கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு முருகராஜ் தனது மனைவி அம்பிகாவை செல்போனில் தொடர்பு கொண்டார். ஆனால் நீண்ட நேரம் செல்போன் ஒலித்துக் கொண்டே இருந்தது. எதிர்முனையில் யாரும் பேசவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த முருகராஜ் அழகு நிலையத்திற்கு சென்றார். அங்கு அம்பிகா, குருலெட்சுமி ஆகியோர் மயங்கிய நிலையில் கிடந்தனர். அம்பிகா கழுத்தில் காயங்கள் இருந்தன. இதுபற்றி தகவலறிந்த கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுன்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மயங்கிய நிலையில் கிடந்த அம்பிகா, குருலெட்சுமி ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் அம்பிகா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இச்சம்பவம் குறித்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியானது.

    அழகு நிலையத்துக்கு அம்பிகா வந்த போது மர்ம நபர்கள் அவரை பின்தொடர்ந்து அழகு நிலையத்திற்கு வந்துள்ளனர். அப்போது அந்த நபர்கள் அம்பிகா அணிந்து இருந்த தங்க நகையை பறிக்க முயன்றுள்ளனர். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது அழகு நிலையம் அருகில் பூக்கடை நடத்தி வந்த குருலெட்சுமி அழகு நிலையத்திற்கு வந்துள்ளார். அவர் அம்பிகாவிடம் தகராறு செய்து கொண்டிருந்த கும்பலை தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் அம்பிகா, குருலெட்சுமி ஆகிய 2 பேரையும் தாக்கி அவர்கள் முகத்தில் மயக்க மருந்து ஸ்பிரே அடித்துள்ளனர். இதில் சிறிது நேரத்தில் இருவரும் மயங்கி விழுந்தனர். பின்னர் அம்பிகா அணிந்திருந்த 7 பவுன் நகையை அந்த கும்பல் பறித்து விட்டு தப்பி சென்றது விசாரணையில் தெரியவந்தது.

    தப்பி ஓடிய கொள்ளை கும்பலை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் கொள்ளை கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கிடையே ஆபத்தான நிலையில் உள்ள குருலெட்சுமிக்கு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×