search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இரு மொழி கொள்கையை அ.தி.மு.க. அரசு தொடர்ந்து கடைபிடிக்கும்: ஸ்டாலினுக்கு அமைச்சர் பதில்
    X

    இரு மொழி கொள்கையை அ.தி.மு.க. அரசு தொடர்ந்து கடைபிடிக்கும்: ஸ்டாலினுக்கு அமைச்சர் பதில்

    அ.தி.மு.க. அரசு இருமொழி கொள்கையை தொடர்ந்து கடைபிடிக்கும் என மு.க.ஸ்டாலின் பேச்சுக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார்.
    கோபி:

    கோபி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிகணினி வழங்கும் விழா இன்று நடந்தது.

    மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். கோபி கல்வி மாவட்ட அதிகாரி கலைச்செல்வன் வரவேற்றார். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலமுரளி முன்னிலை வகித்தார்.

    இதில் 153 பேருக்கு அமைச்சர் செங்கோட்டையன் இலவச மடிகணினியை வழங்கி பேசியதாவது:-

    இந்த அரசு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை செயல்படுத்தி சிறப்பாக நடைபெற்று வருகிறது. வரும் கல்வியாண்டு முதல் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு புதிய சீருடைகள் 3 விதமாக மாற்றியமைக்கப்படும்.

    மாணவ, மாணவிகள் பெற்றோர்களை நேசிக்க வேண்டும். அவருடைய ஆசையை நிறைவேற்ற வேண்டும். பெற்றோர்கள்- மகன்களிடையே பாசம் குறைந்து விட்டது. அவர்களுக்கு நேசகரம் நீட்ட வேண்டும்.

    எதிர்காலத்தில் மாணவர்களை சிறந்து கல்வியாளராக உருவாக்குவதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசு பாடுபட்டு வருகிறது.

    பிளஸ்-2 படித்து முடித்தவுடன் வேலை என்ற அடிப்படையில் பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டு வரும் நவம்பர் 15-ம் தேதி முதல் செயல்படுத்தப்படும். கற்றல் குறைபாடு உள்ள மாணவர்கள் தமிழகத்தில் 10 சதவீதம் பேர் உள்ளனர். இவர்களுக்கு தனியாக விரைவில் பயிற்சியளிக்கப்படும்.

    நீட் தேர்வு பற்றி மாணவ, மாணவிகள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. இதற்காக இலவசமாக பயிற்சியளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக 3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சிறந்த வல்லுனர்களைக் கொண்டு பயிற்சியளிக்கப்படும்.

    எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில் தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் கொண்டு வர இந்த அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.

    இந்த அரசு முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா வகுத்த பாதையில்தான் செயல்பட்டு வருகிறது. நாங்கள் இருமொழி கொள்கையைத்தான் கடைபிடிப்போம். இதில் எந்த விதமான மாற்றமும் இல்லை.

    இந்த அரசு திராவிட இயக்கத்தை காக்கும் வகையில் வீறுநடை போடும் என் பதில் ஐயமில்லை. பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும்போதே மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிகணினி வழங்க இந்த அரசு திட்டமிட்டுள்ளது. வரும் டிசம்பர் மாதத்திற்குள் கல்வித்துறையில் மிகப்பெரும் மாற்றம் கொண்டு வரப்படும்.

    இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

    விழாவில், சிட்கோ வாரிய முன்னாள் தலைவர் சிந்து ரவிச்சந்திரன், நம்பியூர் ஒன்றிய செயலாளர் தம்பி சுப்பிரமணியம், மாவட்ட மாணவரணி செயலாளர் பிரினியோ கணேஷ், கோபி கூட்டுறவு சங்க தலைவர் காளியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×