search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரியில் மேகதாது அணை தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்?: சீமான்
    X

    காவிரியில் மேகதாது அணை தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்?: சீமான்

    காவிரியில் மேகதாது அணை தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    மேகதாதுவில் கர்நாடக அரசு புதிய அணை கட்டுவதற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பாக போராட்டங்களையும் நடத்தியுள்ளனர்.

    இதற்கிடையில் சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது தமிழகத்துக்கு பாதிப்பு இல்லாமல் கர்நாடகம் அணை கட்டினால் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்று தமிழக அரசு தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியானது.

    இதற்கு காவிரி டெல்டா விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்து போராட்டங்களிலும் ஈடுபட்டனர். அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தமிழக அரசின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:-

    காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அமல்படுத்துவதற்கு கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. அதேபோல உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. அதற்கான பிரதிநிதிகளை தமிழக அரசு அறிவித்த பின்னரும் கர்நாடகா அதில் அக்கறை காட்டவில்லை.

    இப்படி காவிரியில் இருந்து தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கொடுக்க கூடாது என்பதில் கர்நாடக அரசு உறுதியோடு உள்ளது. இதனால் காவிரி டெல்டா பகுதிகள் பாலைவனமாக மாறிக்கொண்டிருக்கின்றன.

    காவிரி நீர் டெல்டா பகுதிகளில் விவசாயத்துக்கு பயன்படுவதுடன் ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தஞ்சையில் விளைந்தால் தமிழகத்துக்கே சோறு போடலாம். தமிழகம் விளைந்தால் இந்தியாவுக்கே சோறு போடலாம் என்று அடிக்கடி கூறுவார்.

    ஆனால் இன்று காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் தண்ணீர் இன்றி தவிக்கும் நிலை உள்ளது.

    இதுபோன்ற ஒரு சூழ்நிலையில்தான் கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டி வருகிறது. அதை தடுத்து நிறுத்த வேண்டியது தமிழக அரசின் கடமையாகும். ஆனால் அதனை மறந்துவிட்டு செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது.

    தமிழகத்துக்கு பாதிப்பு இல்லாமல் கர்நாடக அரசு மேகதாதுவில் அணையை கட்டிக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் வழக்கறிஞர் கூறியுள்ளார். இது தமிழக மக்களுக்கு எடப்பாடி பழனிசாமி அரசு செய்துள்ள மிகப்பெரிய துரோகம் ஆகும். இது உயிரை எடுக்காமல் கழுத்தை அறுத்துக் கொள்ளுங்கள் என்பதற்கு சமமானதாகும்.

    தற்போது முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் அதுபோல தமிழக அரசு எதுவும் தெரிவிக்கவில்லை என்று மறுத்துள்ளார். அப்படி என்றால் முதல் அமைச்சருக்கு தெரியாமலேயே நடக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. முதல் அமைச்சரிடம் கலந்து ஆலோசிக்காமலேயே தமிழக அரசின் வக்கீல் உச்சநீதிமன்றத்தில் தனது கருத்தை பதிவு செய்துவிட்டாரா என்பதையும் தமிழக அரசு தெளிவு படுத்த வேண்டும்.

    மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையிலேயே அரசின் செயல்பாடுகள் இருக்க வேண்டும்.அவர்களின் உரிமைகளை பறிக்கக் கூடாது.

    இந்த பிரச்சனைக்காக விவசாயிகள் போராடி வரும் நிலையில் நாம் தமிழர் கட்சியும் அவர்களுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினர்.

    Next Story
    ×