search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீவுத்திடல் அருகே வானதி சீனிவாசன் காரை மறித்து மோடிக்கு எதிராக கோ‌ஷம்
    X

    தீவுத்திடல் அருகே வானதி சீனிவாசன் காரை மறித்து மோடிக்கு எதிராக கோ‌ஷம்

    சென்னை தீவுத்திடல் அருகே தமிழக பா.ஜனதா பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் காரை சிலர் வழி மறித்து மோடிக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    சென்னை:

    தமிழக பா.ஜனதா பொதுச்செயலாளர் வக்கீல் வானதி சீனிவாசன். கோவையில் இருந்து இன்று காலையில் ரெயில் மூலம் சென்னை வந்தார்.

    சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து அவரை அழைத்து செல்வதற்காக டிரைவர் கோபிநாத் காரில் சென்ட்ரல் சென்றார்.

    கார் தீவுத்திடல் அருகில் வந்தபோது அங்கு திரண்டிருந்தவர்களில் சிலர் காரில் பா.ஜனதா கொடி கட்டப்பட்டிருந்ததை பார்த்ததும் காரை வழிமறித்தனர்.

    மோடிக்கு எதிராகவும், பா.ஜனதாவுக்கு எதிராகவும், கோ‌ஷங்கள் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பெரியவர்கள் சிலர் வந்து அங்கிருந்து காரை அனுப்பி வைத்துள்ளனர்.

    இதற்கிடையில் ரெயில் நிலையத்தில் வந்து இறங்கிய வானதி சீனிவாசன் கார் வராததால் அங்கேயே காத்திருந்தார். சுமார் அரைமணி நேரத்துக்கு பிறகு கார் தாமதமாக வந்தது. அப்போது நடந்த விபரங்களை டிரைவர் கோபிநாத், வானதியிடம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக திருவல்லிக்கேணி போலீசில் கோபிநாத் புகார் செய்துள்ளார். இந்த சம்பவம் பற்றி வானதி சீனிவாசன் கூறும் போது, ஆளில்லாத காரையே வழிமறித்து இருக்கிறார்கள். ஒருவேளை காரில் நான் இருந்திருந்தால் தாக்க கூட முயற்சித்து இருப்பார்கள். இந்த தகாத செயலில் ஈடுபட்டவர்கள் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் என்று கூறப்படுகிறது. அரசியலில் எதிர் கருத்துக்கள் இருப்பதும், எதிர்ப்பு கோ‌ஷங்கள் எழுப்புவதும் தவறல்ல. அதை கையாண்ட முறைதான் தவறு. கண்டனத்துக்குரியது என்றார்.
    Next Story
    ×