search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்தில் இரு கால்களை இழந்த விவசாயிகளுக்கு ரூ.21 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்: ஐகோர்ட்டு
    X

    விபத்தில் இரு கால்களை இழந்த விவசாயிகளுக்கு ரூ.21 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்: ஐகோர்ட்டு

    விபத்தில் இரு கால்களை இழந்த விவசாயிக்கு, ரூ.21 லட்சம் இழப்பீடு வழங்க போக்குவரத்து கழகத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    காஞ்சீபுரத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 61), விவசாயி. இவர், கடந்த 2013ம் ஆண்டு மே 19-ந் தேதி வந்தவாசியிலிருந்து தெள்ளார் செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, காஞ்சீபுரம் கோட்டத்தைச் சேர்ந்த அரசு பஸ் அவர் மீது மோதியது. இந்த விபத்தில் கோவிந்தராஜுவின் இரண்டு கால்களும் துண்டானது.

    இதையடுத்து தனக்கு ரூ.25 லட்சம் நஷ்டஈடு வழங்க கோரி சென்னையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், கோவிந்தராஜுக்கு ரூ.11 லட்சத்து 86 ஆயிரத்து 200 நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கடந்த 2014ம் ஆண்டு உத்தரவிட்டது.

    இந்த நஷ்டஈட்டுத்தொகை மிகவும் குறைவாக உள்ளது என்று சென்னை ஐகோர்ட்டில், கோவிந்தராஜ் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.விமலா பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    பாதிக்கப்பட்ட கோவிந்தராஜ் ஒரு விவசாயி. அவர் ஒருவர் உழைத்து, 90 வயதான தனது தாயை கவனிக்க வேண்டும். தற்போது அவரது இரு கால்களும் துண்டிக்கப்பட்டதால், அவருக்கே ஒரு உதவியாளர் தேவைப்படுகிறது. அவருக்கு செயற்கை கால்களும் பொருத்த முடியாது. எனவே, அவருக்கு தீர்ப்பாயம் அளித்த நிவாரணத்தொகை போதுமானது இல்லை என்று முடிவு செய்கிறேன்.

    அரசு போக்குவரத்துக்கழக காஞ்சீபுரம் மண்டலம், ரூ.21 லட்சத்து 45 ஆயிரத்தை நஷ்ட ஈடாக கோவிந்தராஜுக்கு வழங்க வேண்டும். இந்த தொகையை, வழக்கு தொடர்ந்த நாளில் இருந்து 7.5 சதவீத வட்டியுடன், ஒரு மாதத்துக்குள் வழங்கவேண்டும். அவ்வாறு நஷ்ட ஈடு வழங்கப்பட்ட பின்னர், அதுதொடர்பான அறிக்கையை இந்த ஐகோர்ட்டில் போக்குவரத்து கழகம் தாக்கல் செய்யவேண்டும்.

    நஷ்ட ஈட்டு தொகையில் ரூ.10 லட்சத்தை கோவிந்தராஜ் உடனே எடுத்துக்கொள்ளலாம். மீதித்தொகையை அவரது பெயரில் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டு, அதிலிருந்து வரும் வட்டியை ஒவ்வொரு மாதமும் எடுத்துக்கொள்ளலாம்.

    இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
    Next Story
    ×