search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண் கொலையில் கைதான வாலிபர்கள் மற்றும் அவர்களை கைது செய்த தனிப்படை போலீசாரை படத்தில் காணலாம்.
    X
    பெண் கொலையில் கைதான வாலிபர்கள் மற்றும் அவர்களை கைது செய்த தனிப்படை போலீசாரை படத்தில் காணலாம்.

    தென்காசியில் நகை-பணத்திற்காக பெண்ணை கொன்ற 3 பேர் கைது

    தென்காசியில் நகை மற்றும் பணத்திற்காக பெண்ணை கொன்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தென்காசி:

    நெல்லை மாவட்டம் தென்காசி ரெயில்வே குடியிருப்பை சேர்ந்த மாடசாமி என்பவரின் மனைவி சுடலைமாரி, தென்காசி ரெயில் நிலையத்தில் கேங்மேனாக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் இறந்து விட்டார். ஆகவே சுடலைமாரியுடன் அவரது தாய் லட்சுமி(வயது 70) வசித்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 9-ந் தேதி சுடலைமாரி வேலைக்கு சென்று விட்ட நிலையில் அவரது தாய் லட்சுமி மட்டும் தனியாக இருந்தார். அப்போது அவரது வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் லட்சுமியை கழுத்தை அறுத்து கொன்று விட்டு, அவர் அணிந்திருந்த 2 பவுன் தங்க நகை, வீட்டு பீரோவில் இருந்த ரூ.30 ஆயிரம் பணம் மற்றும் அவரது செல்போன் ஆகியவற்றை திருடிச்சென்று விட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து தென்காசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கொலையாளிகளை கண்டுபிடிக்க இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். லட்சுமி வீட்டில் பகல் நேரத்தில் தனியாக இருப்பதை நோட்டமிட்ட மர்மநபர்கள் அவரை கொன்று நகை-பணத்தை கொள்ளை அடித்து சென்றிருப்பதால், அவருக்கு தெரிந்த நபர்கள் இதில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.

    அதன் அடிப்படையில் கொலையாளிகளை தனிப்படை போலீசார் தேடிவந்தனர். கொலையாளிகள் லட்சுமியின் செல்போனை திருடிச் சென்றதால், அதன்மூலம் கொலையாளிகள் இருப்பிடத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ரகசியமாக ஈடுபட்டு வந்தனர். அதில் தென்காசி பகுதியில் கொலையாளிகள் சுற்றிதிரிவது கண்டுபிடிக்கப்பட்டது அதன்பேரில் தனிப்படை போலீசார் ரோந்து சுற்றி வந்தனர்.

    இந்நிலையில் நேற்று மதியம் தென்காசி -ஆய்க்குடி சாலையில் உள்ள சாய்பாபா கோவில் பின்புறம் உள்ள பொத்தையில் ஆட்டோ ஒன்று வெகுநேரமாக நிற்பதாக தென்காசி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் லட்சுமி கொலையில் துப்புதுலக்க உருவாக்கப்பட்ட தனிப்படை போலீசார் அங்கு சென்றனர். போலீசாரை கண்டதும் அங்கு இருந்த 4 பேர் தப்பியோடினர்.

    அவர்களை போலீசார் துரத்தினர். இதில் 3 பேர் பிடிபட்டனர். ஒருவர் தப்பியோடிவிட்டார். பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் லட்சுமி கொலையில் தேடப்பட்டு வந்த கொலையாளிகள் என்பது தெரியவந்தது. அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தை சேர்ந்த தமிழரசன்(26), நெல்லை ரெட்டியார்பட்டியை சேர்ந்த ஆடு அறுக்கும் தொழிலாளி செல்வம் என்ற செல்வரத்தினம்(27), வள்ளியூரை சேர்ந்த அய்யப்பன் (26) ஆவர்.

    அவர்கள் பணத்திற்காக லட்சுமியை கொன்றதும், பீரோவில் இருந்த 30 ஆயிரம் பணம் மற்றும் செல்போனை திருடியதையும் ஒப்புக்கொண்டனர். மேலும் திருடிய நகையை விற்க கேரளா செல்ல திட்டமிட்டதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    கைதானவர்களில் தமிழரசன் என்பவர் கொலை செய்யப்பட்ட லட்சுமியின் பேரன் உறவு முறையாகும். உறவினர் என்ற முறையில் லட்சுமியின் வீட்டிற்கு அடிக்கடி வந்துள்ளார். அப்போது லட்சுமி தனது மகளுடன் தனியாக வசித்து வருவதை அறிந்த தமிழரசன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளை திட்டத்தை வகுத்துள்ளார். அதன்படி சம்பவத்தன்று கொள்ளையடிக்க வந்துள்ளனர். லட்சுமியும் தனது உறவினர் என்ற முறையில் தமிழரசனையும், அவருடன் வந்த அவரது நண்பர்களையும் வீட்டிற்குள் அனுமதித்துள்ளார். இதனை பயன்படுத்திக்கொண்ட கொலையாளிகள் லட்சுமியை கொன்று நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    பிடிபட்ட 3 பேரிடம் இருந்து கத்தி, செல்போன், 4 கிராம் தங்கமோதிரம் மற்றும் 9 கிராம் தங்கசெயின் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பி ஓடிய நாசரேத்தை சேர்ந்த ராஜா என்பவரை போலீசார் தேடிவருகின்றனர்.
    Next Story
    ×