search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தவறான சிகிச்சையால் பெண் மரணம்: தனியார் ஆஸ்பத்திரியை உறவினர்கள் முற்றுகை
    X

    தவறான சிகிச்சையால் பெண் மரணம்: தனியார் ஆஸ்பத்திரியை உறவினர்கள் முற்றுகை

    தவறான அறுவை சிகிச்சையால் பெண் இறந்ததாக கூறி புதுவை தனியார் ஆஸ்பத்திரியை உறவினர்கள் முற்றுகையிட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவையை அடுத்த தமிழக பகுதியான அனுமந்தை கிராமத்தை சேர்ந்தவர் சிவபாலன். இவர், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி கோமதி (வயது 28). இவர்களுக்கு திருமணமாகி 5 வருடங்கள் ஆகிறது. இவருக்கு குழந்தை இல்லாததால் புதுவை குயவர் பாளையத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் குழந்தை பேறுக்காக சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

    இதற்கிடையே கோமதியின் குடல்வால்வில் கட்டி ஏற்பட்டுள்ளதாகவும் அதனை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும் என ஆஸ்பத்திரி நிர்வாகம் கேட்டு கொண்டது.

    இதனை ஏற்று கொண்ட கோமதி குடும்பத்தினர் அறுவை சிகிச்சை அளிக்க சம்மதம் தெரிவித்தனர். அதன்படி கடந்த 16-ந் தேதி கோமதிக்கு அறுவை சிகிச்சை நடந்தது. இதன் பின்னர் கோமதி வீடு திரும்பினார்.

    இந்த நிலையில் நேற்று காலை கோமதிக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு ரத்த வாந்தி எடுத்தார்.

    இதையடுத்து அவரது குடும்பத்தினர் கோமதியை அறுவை சிகிச்சை செய்த ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர்.

    அப்போது ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் கோமதி ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறி அவரை வேறு ஒரு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.

    இதையடுத்து கோமதியை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு கோமதி பரிதாபமாக இறந்து போனார். தனியார் ஆஸ்பத்திரியில் தவறான அறுவை சிகிச்சையினால் தான் கோமதி இறந்து போனதாக அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆத்திரம் அடைந்தனர்.

    இன்று காலை அவர்கள் தனியார் ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் உருளையன்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு போராட்டம் நடத்திய கோமதியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஆனால், அவர்கள் அதை ஏற்கவில்லை. தவறான அறுவை சிகிச்சை செய்த ஆஸ்பத்திரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி போராட்டத்தை தொடர்ந்தனர்.

    இதையடுத்து போலீசார் இது சம்பந்தமாக புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை ஏற்று அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    பின்னர் கோமதியின் உறவினர்கள் ஆஸ்பத்திரி நிர்வாகம் மீது புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் கோமதியின் உடல் பிரேத பரிசோதனை நடத்தப்படுகிறது.

    Next Story
    ×