search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நியூசிலாந்து 6 விக்கெட்டில் வெற்றி: 30 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம் - வீராட்கோலி
    X

    நியூசிலாந்து 6 விக்கெட்டில் வெற்றி: 30 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம் - வீராட்கோலி

    நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 30 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம் என தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் வீராட்கோலி கருத்து தெரிவித்துள்ளார்.

    மும்பை:

    நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது.

    மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 280 ரன் குவித்தது. கேப்டன் வீராட் கோலி சதம் அடித்தார். அவர் 125 பந்தில் 121 ரன்னும் (9 பவுண்டரி, 2 சிக்சர்), தினேஷ் கார்த்திக் 37 ரன்னும் எடுத்தனர். போல்ட் 4 விக்கெட்டும், சவுத்தி 3 விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணி 49 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 284 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டாம் லாதம் சதம் அடித்தார். அவர் 102 பந்தில் 103 ரன்னும் (8 பவுண்டரி, 2 சிக்சர்), டெய்லர் 100 பந்தில் 95 ரன்னும் (8 பவுண்டரி) எடுத்தனர்.

    இருவரும் இணைந்து 4-வது விக்கெட்டுக்கு 200 ரன் எடுத்தது ஆட்டத்தின் முக்கிய அம்சமாகும். இந்த ஜோடியின் விக்கெட்டை பிரிக்க முடியாததால் இந்திய அணிக்கு தோல்வி ஏற்பட்டது.


    தோல்வி குறித்து கேப்டன் வீராட்கோலி கூறியதாவது:-

    எனது ஆட்டம் திருப்தி அளிக்கும் வகையில் இருந்தது. நியூசிலாந்து அணி தொடக்கத்திலேயே எங்களுக்கு நெருக்கடி கொடுத்தது. 275 ரன்னே (280) நல்ல ஸ்கோர் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் டெய்லரும், டாம் லாதமும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    ரன்அவுட் தவிர அவர்கள் எங்களுக்கு எந்த வாய்ப்பையும் கொடுக்கவில்லை. இருவரும் இணைந்து 200 ரன்களை சேர்த்ததன் மூலம் வெற்றிக்கு தகுதியான அணியாகுகிறது.

    2-வது பகுதி ஆட்டத்தில் பந்துவீச்சு முக்கிய பங்கு வகித்தது. கடைசி 13-14 ஓவர்களில் நாங்கள் 20-30 ரன்கள் வரை குறைவாக எடுத்துவிட்டோம். இன்னும் ஒரிருவர் நன்றாக பேட்டிங் செய்து இருந்தால் சிறப்பாக இருந்து இருக்கும். அப்படி நடந்து இருந்தால் 30-40 ரன்கள் கூடுதலாக வந்து இருக்கும் பேட்ஸ்மேன்களிடம் இருந்து இதைவிட சிறப்பான பேட்டிங்கை எதிர்பார்க்கிறேன்.

    நியூசிலாந்து வீரர்கள் நமது சுழற்பந்து வீச்சை சரியான முறையில் கையாண்டனர். வேகப்பந்து வீரர்களையும் மிகவும் நல்ல முறையில் எதிர்கொண்டனர். டாம் லாதம், டெய்லருக்கு தான் அனைத்து பாராட்டு சாரும்.


    இவ்வாறு அவர் கூறினார்.

    வெற்றி குறித்து நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் கூறும் போது, எங்களது சிறந்த சேசிங் இதுவாகும். டாம் லாதம், டெய்லர் ஆட்டம் முழுவதையும் கட்டுப்படுத்தினர் என்றார்.

    இந்த வெற்றி மூலம் நியூசிலாந்து அணி 3 போட்டிக்கொண்ட தொட ரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2-வது ஒருநாள் போட்டி வருகிற 25-ந்தேதி புனேயில் நடக்கிறது.

    Next Story
    ×