search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டக்வொர்த் லீவிஸ் விதிமுறை புரியவில்லை: விராட் கோலி
    X

    டக்வொர்த் லீவிஸ் விதிமுறை புரியவில்லை: விராட் கோலி

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் வெற்றி பெற்றதை அடுத்து, டக்வொர்த் லீவிஸ் விதிமுறை உண்மையிலேயே எங்களுக்கு புரியவில்லை என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.
    ராஞ்சி:

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.

    ராஞ்சியில் நடந்த இந்த ஆட்டத்தில் ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஆஸ்திரேலியாவை முதலில் விளையாட அழைத்தார். அந்த அணி 18.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 118 ரன் எடுத்து இருந்த போது ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது.

    ஆரோன் பிஞ்ச் 30 பந்தில் 42 ரன் (4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார். பும்ரா, குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டும், புவனேஸ்வர்குமார், ஹர்திக் பாண்டியா, யுசுவேந்திர சஹால் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.

    2 மணி நேரம் மழையால் போட்டி பாதிக்கப்பட்டது. இதனால் ஆஸ்திரேலியா ஆட்டம் அதோடு முடிக்கப்பட்டது. டக்வொர்த் லீவிஸ் விதிப்பில் இந்தியாவுக்கு 6 ஓவரில் 48 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணி 5.3 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 49 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-

    டாஸ் வென்று பந்து வீச்சை முதலில் தேர்வு செய்தது சரியான முடிவு. டக்வொர்த் லீவிஸ் விதிமுறை உண்மையிலேயே எங்களுக்கு புரியவில்லை. ஆஸ்திரேலியாவை நாங்கள் 118 ரன்னுக்குள் கட்டுப்படுத்தி விட்டோம். இதனால் 6 ஓவர்களில் 40 ரன் வரை தான் இலக்காக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் 48 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இது தந்திரமானது. இது எப்படி என்றே தெரியவில்லை.

    இந்த போட்டியின் வெற்றிக்கு அனைத்து வீரர்களுமே காரணம். எல்லோரும் ஒருங்கிணைந்து இந்த வெற்றியை பெற்றோம். பவுலர்கள் மிகவும் சிறப்பாக பந்து வீசினார்கள். ஒரு போட்டியில் ரன்களை வாரி வழங்கினால் அடுத்த போட்டியில் கட்டுப்படுத்தி விடுகிறார்கள்.

    புவனேஸ்வர் குமார், பூம்ரா ஆகியோர் அபாரமாக பந்து வீசுகிறார்கள். அவர்களின் ‘யார்க்கர்’ பந்துக்கள் எதிர் அணி பேட்ஸ்மேன்களுக்கு தலை வலியாக இருக்கும். பல போட்டியில் விளையாடாமல் இருந்த தவான் அணிக்கு திரும்பி இருப்பது பலமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தோல்வி குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் டேவிட் வார்னர் கூறியதாவது:-

    இந்தப் போட்டியிலும் நாங்கள் தோற்று விட்டோம். அடுத்தப் போட்டியில் சிறப்பாக விளையாடுவோம். 120 ரன்னுக்குள் கிட்டத்தட்ட அனைத்து விக்கெட்டையும் இழந்து விட்டோம்.

    இந்திய பவுலர்கள் மிகவும் சிறப்பாக பந்து வீசினார்கள். நாங்கள் எந்த வகையிலும் வெற்றி பெற தகுதியை பெறவில்லை. தோல்வி பற்றிய கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. மிடில் ஆர்டரில் நாங்கள் மீண்டும் சரிந்து விட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த வெற்றி மூலம் 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2-வது போட்டி வருகிற 10-ந் தேதி கவுகாத்தியில் நடக்கிறது.

    5 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி ஏற்கனவே 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×