search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிரியை காவ்யா
    X
    ஆசிரியை காவ்யா

    கொல்லம் அருகே காதல் தோல்வியால் ஆசிரியை தற்கொலை: காதலன் கைது

    கொல்லம் அருகே காதல் தோல்வியால் ரெயில் முன் பாய்ந்து ஆசிரியை தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக காதலனை போலீசார் கைது செய்தனர்.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டியத்தை சேர்ந்தவர் ஜீனு. இவரது மகள் காவ்யா (வயது 24). இவர் கொல்லம் தளுத்தலை என்ற இடத்தில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் குட்டிக்கடையை சேர்ந்த பிரதீப் (24) என்பவரும் காவ்யாவும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

    இவர்களின் காதல் விவகாரம் இருவரது வீட்டிற்கும் தெரியவந்தது. பிரதீப்பின் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இருந்தாலும் அங்குள்ள பெரியவர்கள் சமாதானம் செய்து வைத்து காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

    அதன்படி திருமண பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது மாப்பிள்ளை வீட்டார் 101 பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ.10 லட்சம் வரதட்சணையாக தரவேண்டும் என்று கேட்டனர். அவ்வளவு நகை, பணம் கொடுக்க முடியாது என்று பெண் வீட்டார் கூறினர்.

    இதனால் திருமண ஏற்பாடுகள் நின்று போனது. காதல் நிறைவேறாத ஏக்கத்தில் இருந்த காவ்யா படியூர் ரெயில் தண்டவாளம் அருகே நடந்து சென்றார். அப்போது திடீரென அந்த வழியாக வந்த ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

    மகளின் இறுதி சடங்கு முடிந்த பின்னர் காவ்யாவின் தந்தை கொல்லம் போலீஸ் கமி‌ஷனரிடம் ஒரு புகார் அளித்தார். அதில் பிரதீப் என்பவர் திருமண ஆசை காட்டி எனது மகளை ஏமாற்றிவிட்டார். பெரியோர்கள் சமாதானம் செய்து வைத்து ஏற்பாடு செய்த திருமண நிகழ்ச்சியை நிறுத்த 101 பவுன் நகை மற்றும் ரூ.10 லட்சம் வரதட்சணையாக கேட்டனர்.

    கொடுக்க முடியாது என்று தெரிந்தும் வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்தினர். இதனால் எனது மகள் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு தூண்டிய பிரதீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

    இது குறித்து கொல்லம் போலீஸ் கமி‌ஷனர் விசாரணை நடத்தினார். விசாரணையில் பெண்ணின் தந்தை கூறியது உண்மை என்று தெரியவந்தது. இதனையடுத்து காதலன் பிரதீப் நேற்று கைது செய்யப்பட்டார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
    Next Story
    ×