search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீஸ் அதிகாரி கணபதி தற்கொலை விவகாரம்: கர்நாடக மந்திரி கே.ஜே.ஜார்ஜ் மீது சி.பி.ஐ. வழக்கு
    X

    போலீஸ் அதிகாரி கணபதி தற்கொலை விவகாரம்: கர்நாடக மந்திரி கே.ஜே.ஜார்ஜ் மீது சி.பி.ஐ. வழக்கு

    போலீஸ் அதிகாரி கணபதி தற்கொலை விவகாரத்தில் கர்நாடக மந்திரி கே.ஜே.ஜார்ஜ் மற்றும் 2 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் மங்களூரு மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. அலுவலகத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றியவர் கணபதி. இவர், கடந்த ஆண்டு ஜூலை மாதம் குடகு மாவட்டம் மடிகேரியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்யும் முன்பாக தனியார் கன்னட தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், போலீஸ் மந்திரியாக இருந்த கே.ஜே.ஜார்ஜ், ஐ.பி.எஸ். அதிகாரிகளான பிரணாவ் மொகந்தி, ஏ.எம்.பிரசாத் ஆகியோர் தனக்கு பணியின் போது தொல்லை கொடுத்ததாகவும், தனக்கு ஏதாவது நடந்தால், அவர்கள் 3 பேரும் தான் பொறுப்பு என்றும் தெரிவித்து இருந்தார்.

    கணபதி தற்கொலை குறித்து மடிகேரி டவுன் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதே நேரத்தில் கணபதி தற்கொலைக்கு மந்திரி கே.ஜே.ஜார்ஜ், 2 ஐ.பி.எஸ். அதிகாரிகள் தான் காரணம் என்று கணபதியின் குடும்பத்தினரும், எதிர்க்கட்சியினரும் குற்றம்சாட்டினார்கள். மேலும் கே.ஜே.ஜார்ஜை மந்திரி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும், ஐ.பி.எஸ். அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து, மந்திரி பதவியில் இருந்து கே.ஜே.ஜார்ஜ் நீக்கப்பட்டார்.



    மேலும் கணபதி தற்கொலை குறித்து முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவின்பேரில், சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினார்கள். ஆனால் கணபதி தற்கொலைக்கு கே.ஜே.ஜார்ஜ், ஐ.பி.எஸ். அதிகாரிகள் பிரணாவ் மொகந்தி, ஏ.எம்.பிரசாத் காரணம் இல்லை என்று அரசிடம் சி.ஐ.டி. போலீசார் அறிக்கை தாக்கல் செய்தார்கள். அதைத்தொடர்ந்து, கே.ஜே.ஜார்ஜ் பெங்களூரு வளர்ச்சித்துறை மந்திரியாக நியமிக்கப்பட்டார்.

    ஆனால் கணபதியின் தற்கொலைக்கு மந்திரி கே.ஜே.ஜார்ஜ், 2 ஐ.பி.எஸ். அதிகாரிகள் தான் காரணம் என்றும், இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டில் போலீஸ் அதிகாரியின் குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கடந்த மாதம் 5-ந் தேதி கணபதி தற்கொலை குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது.

    அதைத்தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி கணபதி தற்கொலை குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் தங்களது விசாரணையை தொடங்கினார்கள். மேலும் மடிகேரி போலீசாரிடம் இருந்து கணபதி தற்கொலை குறித்த வழக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்களை பெற்று கொண்டனர். இதுதவிர பெங்களூருவில் உள்ள சி.ஐ.டி. அலுவலகத்திற்கு சென்று கணபதி தற்கொலை குறித்த விசாரணை நடத்தி திரட்டிய ஆவணங்களையும் பெற்று விசாரணை நடத்தி வந்தனர்.



    இந்தநிலையில், போலீஸ் அதிகாரி கணபதி தற்கொலை விவகாரம் தொடர்பாக மந்திரி கே.ஜே.ஜார்ஜ், ஐ.பி.எஸ். அதிகாரிகள் பிரணாவ் மொகந்தி, ஏ.எம்.பிரசாத் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் மந்திரி கே.ஜே.ஜார்ஜ் பெயர் முதல் குற்றவாளியாகவும், 2-வதாக பிரணாவ் மொகந்தியையும், 3-வதாக ஏ.எம்.பிரசாத்தையும் சேர்த்துள்ளனர்.

    வழக்குப்பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர்கள் 3 பேரிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் எந்த நேரமும் விசாரணை நடத்தலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்த விவகாரம் மந்திரி கே.ஜே.ஜார்ஜுக்கும், கர்நாடக அரசுக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில் கே.ஜே.ஜார்ஜ் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்திருப்பதால், அவரை உடனடியாக மந்திரி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும், இல்லையெனில் கர்நாடக அரசுக்கு எதிராக மாநிலம் முழுவதும் பா.ஜனதா சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றும் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×