search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜனநாயகத்தின் வேர்களை அழிக்கத் துடிக்கும் இருண்ட சக்திகள்: பாராளுமன்றத்தில் சோனியா காந்தி பேச்சு
    X

    ஜனநாயகத்தின் வேர்களை அழிக்கத் துடிக்கும் இருண்ட சக்திகள்: பாராளுமன்றத்தில் சோனியா காந்தி பேச்சு

    ஜனநாயகத்தின் வேர்களை அழிக்கத் துடிக்கும் இருண்ட சக்திகளை முறியடிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.
    புதுடெல்லி:

    8-8-1942 அன்று பம்பாய் நகரில் (தற்போதைய மும்பை) கூடிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ’வெள்ளையனே வெளியேறு’ (Quit India) என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது.

    ஆகஸ்ட் 9 ஆம் தேதி காலை பம்பாய் மாநாட்டிற்கு 3 லட்சம் பேர் திரண்டனர். அமைதியாக நடந்த போராட்டத்தின் மீது தடியடி நடத்தப்பட்டது. பிறகு கண்ணீர்ப் புகை குண்டுகள் வீசப்பட்டன.

    இந்தியாவின் அனைத்து நகரங்களிலும் அன்று தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அமைதி வழியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பிரிட்டிஷ் காவல்துறை தடியடி நடத்தியது. சில இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு பலர் உயிரிழந்தனர். இதனால் வெள்ளையர்களின் சர்வாதிகாரம் மற்றும் அடக்குமுறைக்கு எதிரான சுதந்திரப் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்தது.

    இந்நிலையில், வெள்ளையனே வெளியேறு (Quit India) போராட்டத்தின் 75-வது நினைவுதினம் இன்று கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, பாராளுமன்றத்தில் இன்று சிறப்பு விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி  ஜனநாயகத்தின் வேரை அழிக்கத் துடிக்கும் இருண்ட சக்திகளை முறியடிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    இந்துத்வா மற்றும் ஆர்.எஸ்.எஸ். அல்லது எந்த குறிப்பிட்ட கட்சி தலைவர்களையும் நேரடியாக குறிப்பிடாமல் பேசிய சோனியா காந்தி சுதந்திர போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியும் ஜவஹர்லால் நேருவும் ஆற்றிய பங்களிப்புக்கு புகழாரம் சூட்டினார். அப்போது அவர் கூறியதாவது:-

    மதச்சார்பின்மை மற்றும் சமத்துவத்துக்கு எதிராக தற்போது நாட்டில் வெறுப்புணர்வு மற்றும் பிரிவினைவாதத்தை ஏற்படுத்த முயலும் கருமேகங்கள் சூழ்ந்துள்ளன. இந்த இருண்ட சக்திகள் ஜனநாயகத்தின் வேர்களை அழிக்க முயற்சிக்கின்றன.

    வெள்ளையனே வெளியேறு இயக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்களும், அமைப்புகளும் உண்டு. சுதந்திர போராட்டத்துக்காக அவர்கள் எவ்வித பங்களிப்பும் செய்ததில்லை என்பதை நாம் மறந்துவிட கூடாது. நமது சுதந்திரத்துக்காக போராடியவர்கள் விரும்பியவாறு ஒருவரோடு ஒருவர் அன்பு செலுத்தும் இந்தியா உருவாக மக்கள் போராட வேண்டும்.

    மதச்சார்பின்மையும் பேச்சு சுதந்திரமும் இன்று ஆபத்தில் உள்ளதாக தோன்றுகிறது. சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டுமென்றால் அதை அழிக்க துடிக்கும் சக்திகளை நாம் முறியடித்தாக வேண்டும். மதவாத சித்தாந்தம் மற்றும் குறுகிய மனப்பான்மைக்குள் இந்தியா சிறைப்படுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். மதவாத சக்திகள் வெற்றி பெறுவதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க இயலாது. அனுமதிக்கவும் மாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×