search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இடுக்கியில் பெய்த மழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் காட்சி.
    X
    இடுக்கியில் பெய்த மழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் காட்சி.

    கேரளாவில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை: பெண் உள்பட 5 பேர் பலி

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததையொட்டி சூறாவளி காற்றுடன் பெய்து வரும் பலத்த மழைக்கு பெண் உள்பட 5 பேர் பலியாகினர்.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஒரு வாரம் முன்கூட்டியே தொடங்கியது.

    இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்புக்கு அதிகமாக பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி, கேரளாவில் கடந்த 2 வாரங்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

    குறிப்பாக மாநிலத்தின் மேற்கு பகுதிகளில் மழையின் தீவிரம் அதிகமாக இருந்தது. மழையுடன் சூறாவளி காற்றும் வீசியதால் பல இடங்களில் வீடுகள் இடிந்தும், மின்கம்பங்கள் சாய்ந்தும் சேதங்கள் ஏற்பட்டன. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.



    கேரளாவில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையால் மாநிலம் முழுவதும் பெண் உள்பட 5 பேர் பலியானார்கள்.

    திருவல்லாவைச் சேர்ந்த விஜயன் (வயது 47), ஆலப்புழாவைச் சேர்ந்த ஸ்ரீஹரி (11), வெஞ்ஞாறுகோணத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் (37), திருவனந்தபுரம் தம்பானூரைச் சேர்ந்த பாஸ்கரன் (80), கரமனையைச் சேர்ந்த கவுரிபாய் (82) ஆகியோர் மழையால் இறந்துள்ளனர்.

    வீடுகள் இடிந்தது, மரங்கள் முறிந்து விழுந்ததில் பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த நிலையில் இன்றும், நாளையும் கேரளாவின் பெரும்பாலான மாவட்டங்களில் மிகப்பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கேரள வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

    அதற்கேற்ப நேற்று முன்தினம் முதல் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்தது. நேற்று அதிகபட்சமாக திருச்சூரில் 15 செ.மீ. மழை பதிவாகியது. திருவனந்தபுரத்திலும் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    சூறாவளி காற்றும் தொடர்ந்து வீசி வருவதால் பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமென அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன. மேலும் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

    கேரளாவில் இன்றும், நாளையும் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறி இருப்பதால் கேரளாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



    Next Story
    ×