search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடியுடன் மம்தா பானர்ஜி திடீர் சந்திப்பு: ஜனாதிபதி தேர்தலுக்கு அச்சாரமா?
    X

    பிரதமர் மோடியுடன் மம்தா பானர்ஜி திடீர் சந்திப்பு: ஜனாதிபதி தேர்தலுக்கு அச்சாரமா?

    ஜனாதிபதி தேர்தலுக்கான தேதி நெருங்கி வரும் நிலையில், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைநகர் புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்துள்ளார்.
    புதுடெல்லி:

    ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து பா.ஜ.க.வுக்கு எதிராக பொது வேட்பாளரை இறக்குவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இதன் முக்கிய கட்டமாக எதிர்க்கட்சிகளை சார்ந்த தலைவர்கள் நாளை (வெள்ளிக்கிழமை) சந்தித்து பேச உள்ளனர்.

    இந்த பரபரப்பான தேசிய அரசியல் சூழலுக்கு நடுவே மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்துள்ளார். தலைநகர் புதுடெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. 

    இந்த சந்திப்புக்கு பிறகு மம்தா செய்தியாளர்களிடம் பேசுகையில், “பிரதமரை சந்தித்தபோது வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. ஜனாதிபதி தேர்தல் குறித்து எதுவும் பேசவில்லை. அப்துல் கலாம் கருத்து ஒற்றுமை உள்ள வேட்பாளராக இருந்தார். அதேபோல் ஒரு வேட்பாளரை தேர்வு செய்தால் நல்லதாக இருக்கும். அதனை பார்த்து மகிழ்ச்சி அடைவோம்.

    மேற்குவங்கத்தில் வன்முறை இல்லை. பா.ஜ.க. மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகள் தான் வன்முறையை தொடங்கியது. போலீசாரை அவர்கள் எப்படி அடித்தார்கள், அரசு சொத்துக்களை எரித்தார்கள் என்பதை பாருங்கள்” என்றார்.



    மேற்குவங்க மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, வன்முறை அதிகரித்துள்ளது என்று கூறி பா.ஜ.கவினர் தலைநகர் கொல்கத்தாவில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல், பா.ஜ.க. தலைவர்களுக்கும், மம்தாவுக்கும் இடையே சமீக காலமாக கருத்து போர் நிலவி வருகிறது. இந்த நிலையில் மோடியை மம்தா பானர்ஜி சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×