search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாபர் மசூதி இடிப்பு வழக்கு: மே 30-ம் தேதி அத்வானி உள்ளிட்டோர் நேரில் ஆஜராக சி.பி.ஐ. கோர்ட் உத்தரவு
    X

    பாபர் மசூதி இடிப்பு வழக்கு: மே 30-ம் தேதி அத்வானி உள்ளிட்டோர் நேரில் ஆஜராக சி.பி.ஐ. கோர்ட் உத்தரவு

    பாபர் மசூதி இடிப்பு வழக்கில், பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டோர் மே 30-ம் தேதி ஆஜராக வேண்டும் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்திருந்த பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி இடிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் கரசேவகர்களுக்கு எதிராக லக்னோ சிபிஐ சிறப்பு கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

    இந்த விவகாரத்தில் குற்றச்சதியில் ஈடுபட்டதாக பா.ஜனதா மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, முன்னாள் உத்தரபிரதேச முதல்-மந்திரியும், ராஜஸ்தான் மாநில கவர்னருமான கல்யாண் சிங் உள்ளிட்ட 13 பேர் மீது ரேபரேலி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இதை எதிர்த்து சி.பி.ஐ. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, அத்வானி உள்ளிட்டோர் மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது. மேலும் ஒரு சம்பவத்தில் இருவேறு கோர்ட்டுகளில் விசாரணை நடத்தக்கூடாது என உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு, அத்வானி உள்ளிட்டோர் மீதான குற்றச்சதி வழக்கையும் லக்னோ சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றி கடந்த மாதம் 19-ந் தேதி உத்தரவிட்டது.

    அதன்படி அத்வானி உள்ளிட்டோர் மீதான குற்றச்சதி வழக்கு விசாரணை லக்னோ சிறப்பு கோர்ட்டில் கடந்த திங்கட்கிழமை முதல் தொடங்கி நாள்தோறும் நடைபெற்று வருகிறது. 



    இந்நிலையில், பாபர் மசூதி இடிப்பு வழக்கின் விசாரணை இன்று மீண்டும் வந்த போது, பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி,  மத்திய அமைச்சர் உமா பாரதி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் மே 30-ம் தேதி ஆஜராக வேண்டும் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அன்றைய தினம் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முன்னதாக நேற்று கோர்ட்டில் ஆஜரான முன்னாள் சினசேனா எம்.பி. சதிஷ் பிரதானுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.யாதவ் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான இரண்டு பிணையின் அடிப்படையில் ஜாமீன் வழங்கினார். மேலும் 5 பேருக்கு கடந்த சனிக்கிழமை ஜாமீன் வழங்கப்பட்டது.
    Next Story
    ×