search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தர்மபுரி அருகே ஒட்டப்பட்டி வள்ளுவர் நகரில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் குப்பைகளை அகற்றிய காட்சி.
    X
    தர்மபுரி அருகே ஒட்டப்பட்டி வள்ளுவர் நகரில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் குப்பைகளை அகற்றிய காட்சி.

    தர்மபுரியில் கவர்னர் பன்வாரிலால் ஆய்வு: கருப்புகொடி காட்டி தி.மு.க எதிர்ப்பு

    தர்மபுரி மாவட்டத்தில் கக்கஞ்சிபுரத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு மேற்கொண்டார். கவர்னரின் ஆய்வை எதிர்த்து தி.மு.க.வினர் கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.#BanwarilalPurohit
    நல்லம்பள்ளி:

    தமிழக கவர்னராக பன்வாரிலால் புரோகித் பதவியேற்ற பிறகு ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆய்வு நடத்தி வருகிறார். அவர் தூய்மை பணிகளில் ஈடுபடுவதோடு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களையும் பெற்று வருகிறார். அரசு அதிகாரிகளுடன் வளர்ச்சி பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    இதன் தொடர்ச்சியாக தர்மபுரி மாவட்டத்தில் கவர்னர் பன்வாரிலால் இன்று ஆய்வு மேற்கொண்டார். காலை 9.20 மணிக்கு விருந்தினர் மாளிகையில் இருந்து காரில் புறப்பட்ட கவர்னர் முதலில் ஒட்டப்பட்டி பகுதிக்கு சென்று அங்குள்ள கக்கஞ்சிபுரத்தில் தூய்மை பாரதம் திட்டம் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

    கக்கஞ்சிபுரத்தில் தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் புதிதாக வீட்டின் முன்பு கட்டப்பட்ட தனிமனித கழிப்பிடத்தை பார்வையிட்டு, கழிப்பிடத்தை பராமரிப்பு முறைகள் குறித்து பயனாளிகளுக்கு விளக்கி கூறினார்.

    அந்த பகுதி மக்களிடம் உங்களுடைய வீடுகளையும், கழிவறைகளையும், சுற்றுப்புற பகுதிகைகளையும் எப்போதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். தூய்மையாக வைத்திருந்தால் நோய்கள் எதுவும் பரவாது என்றும் கவர்னர் தெரிவித்தார்.

    கவர்னரை காண ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டிருந்தனர். அவர்கள் கவர்னரை பார்த்து உற்சாகமாக கைகளை அசைத்து வரவேற்பு அளித்தனர். இதனை கண்டு கவர்னர் மகிழ்ச்சி அடைந்தார். கவர்னர் தங்களது கிராமத்திற்கு திடீர் என வருகை புரிந்தது அப்பகுதி மக்களை பெரும் ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் அடைய செய்தது.

    பின்னர் அப்பகுதி மக்களிடம் தூய்மை பாரதம் குறித்து துண்டு பிரசுரத்தை கவர்னர் வழங்கி உறுதி மொழி எடுக்க செய்தார். அதாவது கழிப்பிடங்களையும், சுற்றுப்புறங்களையும் தூய்மையாக வைத்திருப்போம். திறந்த வெளியில் மலம் கழிக்க மாட்டோம். கழிவறையைத் தான் பயன்படுத்துவோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    அப்போது கவர்னருடன் உயர்க்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், கலெக்டர் விவேகானந்தன், மாவட்ட வருவாய் அதிகாரி காளிதாஸ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டு இந்த விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து கவர்னர் ஒட்டப்பட்டியில் உள்ள வள்ளுவர்நகர் பகுதியில் தேங்கிகிடந்த குப்பைகளை அள்ளி தூய்மை படுத்தினார். அப்போது அங்குள்ள கிராம ஊராட்சி சேவை மையம் அருகே நிறைய குப்பைகள் தேங்கி கிடந்தது. இதை பார்த்த கவர்னர் அரசு அலுவலகம் அருகே நிறைய கும்பைகள் தேங்கி கிடந்தால் எப்படி? என கலெக்டரிடம் கேட்டார். உடனடியாக அந்த குப்பைகளை அகற்ற கவர்னர் உத்தரவிட்டார்.

    இதனை தொடர்ந்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒட்டப்பட்டி வெள்ளாளர் பள்ளி முன்பு தூய்மை பாரதம் குறித்து ஆட்டோக்களுக்கு கருப்பு ஸ்டிக்கர் ஓட்டினார்.

    இதனை தொடர்ந்து கவர்னர் பிற்பகல் கலெக்டர் அலுவலகத்தையொட்டியுள்ள சுற்றுலா மாளிகையில் வைத்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்குகிறார்.

    கவர்னர் ஆய்வு செய்ய உள்ள இடங்களில் எல்லாம் உள்ளூர் சட்டம்-ஒழுங்கு போலீசார், ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கவர்னர் தங்கி உள்ள கலெக்டர் அலுவலகத்தையொட்டிள்ள விருந்தினர் மாளிகையிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் வழிநெடுகிலும் 100-க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. உத்தரவின் பேரில், சேலம் சரக டி.ஐ.ஜி. மேற்பார்வையில் போலீஸ் சூப்பிரண்டு பண்டிகங்காதர் தலைமையில் இந்த பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    முன்னதாக பார்வதிபுரம் 66 அடி ரோட்டில் உள்ள உணவு சேமிப்பு பாதுகாப்பு கிடங்கில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு செய்ய இருப்பதாக அறிந்து தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஆதி தமிழர் பேரவை ஆகியவை அங்கு சென்று ஆய்வு செய்ய எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டம் செய்ய தயராக இருந்தனர். ஆனால், கவர்னர் அங்கு செல்லவில்லை. கக்கஞ்சிபுரத்திற்கு சென்றார். இதனால் கருப்பு கொடி காட்ட இருந்த கட்சியினர் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்தனர்.

    பின்னர் ஒட்டப்பட்டி பகுதிக்கு சென்று தி.மு.க. மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.மான தடங்கம் சுப்பிரமணி தலைமையில் தி.மு.க.வினர் சுமார் 200 பேர் கருப்பு கொடி காட்டி கவர்னர் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    நேற்று பாப்பாரப்பட்டியில் உள்ள தியாகி சுப்பிரமணிய சிவா அரசு மேல்நிலைப்பள்ளியின் வைர விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்று வைரவிழா நினைவு நுழைவு வாயில் மற்றும் நினைவு தூணை திறந்து வைத்து, மாணவர்கள் மத்தியில் சிறப்புரை ஆற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது. #TamilNews
    Next Story
    ×