search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீசார் தாக்கிய அவமானத்தில் ரெயில்முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை
    X

    போலீசார் தாக்கிய அவமானத்தில் ரெயில்முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை

    வேப்பம்பட்டில் போலீசார் தாக்கியதால் அவமானத்தில் இருந்த வாலிபர் ரெயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
    செவ்வாப்பேட்டை:

    வேப்பம்பட்டு, பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகன் கோயிலு என்கிற பிரபாகரன் (வயது 25). திருநின்றவூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று மாலை அவர் வேப்பம்பட்டு புளிமர பஸ் நிறுத்தம் அருகே நண்பர்களுடன் நின்றார். அப்போது அவர்கள் அருகே மோதுவது போல் அரசு பஸ் நின்றதாக கூறப்படுகிறது. இதனால் பஸ் டிரைவர், கண்டக்டரை பிரபாகரன் கண்டித்தார்.

    இதுபற்றி பஸ் டிரைவர் வேப்பம்பட்டு சோதனைச் சாவடியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் கூறி சென்றுவிட்டார்.

    இந்த நிலையில் பிரபாகரனை அழைத்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவரை போலீசார் தாக்கியதாக தெரிகிறது. இதற்கிடையே இதுபற்றி அறிந்த பிரபாகரனின் உறவினர்கள் அங்கு வந்து சமாதானம் பேசி பிரபாகரனை அழைத்து சென்றனர்.

    போலீசார் தாக்கியதால் அவமானத்தில் இருந்த பிரபாகரன் திடீரென அங்கிருந்து ரெயில்வே தண்டவாளம் நோக்கி ஓடினார். அப்போது சென்னையில் இருந்து திருவள்ளூர் நோக்கி சென்ற சரக்கு ரெயில் முன் பாய்ந்தார்.

    இதில் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பிரபாகரன் பலியானார். இதனை கண்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதற்குள் பிரபாகரன் தற்கொலை செய்து கொண்டது பற்றி அறிந்த அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். அவர்கள் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருவள்ளூர் - சென்னை சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    போலீஸ் சூப்பிரண்டு சிபி.சக்கரவர்த்தி, டி.எஸ்.பி. புகழேந்தி, ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ, தாசில்தார் தமிழ்ச்செல்வன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பலியான பிரபாகரன் உடல் பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.

    தொடர்ந்து அங்கு பரபரப்பான நிலை நீடிப்பதால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    Next Story
    ×