search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய, மாநில அரசுகளே மீனவர்களை கொன்று விட்டன: அன்புமணி ராமதாஸ்
    X

    மத்திய, மாநில அரசுகளே மீனவர்களை கொன்று விட்டன: அன்புமணி ராமதாஸ்

    மீட்புப் பணியை சரியாக மேற்கொள்ளாமல் மீனவர்களை மத்திய, மாநில அரசுகளே கொன்று விட்டன என அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றவர்களில் 98 மீனவர்கள் உயிரிழந்து இருக்கலாம் என்று மீனவர்கள் அமைப்புகள் தெரிவித்துள்ளன. மீனவச் சொந்தங்களைக் காப்பாற்ற மீனவர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அனைத்து வழிகளிலும் போராடிய நிலையில், ஆட்சியாளர்களின் அலட்சியம் காரணமாக 98 பேர் உயிரிழந்திருப்பது தாங்க முடியாத அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்த மீனவர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தெற்காசிய மீனவர் அமைப்புகளின் பொதுச் செயலாளரும், கன்னியா குமரி மாவட்ட பாதிரியாருமான சர்ச்சில், கடலோரக் கிராமங்களில் உள்ள தேவாலயங்களின் மூலம் இந்த விவரங்களைத் திரட்டியுள்ளார். அதிகபட்சமாக நீரோடி கிராமத்தில் 37 பேரும், சின்னத்துறை கிராமத்தில் 22 பேரும் உயிரிழந்துள்ளனர்.

    குளச்சலைச் சேர்ந்த 13 பேர், இறைவிபுத்தன் புதூரில் 7 பேர், மற்ற ஊர்களில் 19 பேரும் இறந்துள்ளனர். உலக வல்லரசாக உருவெடுத்து விட்டதாக மார்தட்டிக் கொள்ளும் இந்தியாவில் கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை காப்பாற்ற முடியாததால் சுமார் 100 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர் என்பது அவலத்திலும், அவலம் ஆகும். இந்திய கடலோரக் காவல்படையும், கடற்படையும் நினைத்திருந்தால் அனைத்து மீனவர்களையும் எந்த விதமான பாதிப்பும் இல்லாமல் உயிருடன் காப்பாற்றியிருக்க முடியும்.



    ஆனால், இந்த வி‌ஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் காட்டிய அலட்சியம் தான் இவ்வளவு பெரிய சோகத்திற்கு வித்திட்டிருக்கிறது. ஒக்கி புயல் தாக்கிய அடுத்த நாளே மீனவர்களை தேடும் பணியை கடலோரக் காவல்படையும், கடற்படையும் முறையாக மேற்கொண்டிருந்தால் காணாமல் போன மீனவர்களைக் காப்பாற்றியிருக்கலாம்.

    ஆனால், ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் 100 கடல் மைல் தொலைவுக்கு அப்பால் தான் தங்கி மீன் பிடிப்பர் என்ற அடிப்படையை உணராமல் 30 முதல் 60 கடல் மைல் பகுதியில் மட்டுமே தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அதனால் தான் புயலில் சிக்கி நடுக்கடலில் தத்தளித்த மீனவர்களை மீட்க முடியவில்லை.

    ஏற்கனவே நான் குறிப்பிட்டவாறு, மீட்புப் பணியை சரியாக மேற்கொள்ளாமல் மீனவர்களை மத்திய, மாநில அரசுகளே கொன்று விட்டன.

    கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் மேலும் 500 பேரின் நிலை என்ன? என்பது தெரியவில்லை. மத்திய, மாநில அரசுகள் அவற்றிடம் இருக்கும் அனைத்து தொழில்நுட்பங்கள், கட்டமைப்பு வசதிகளைப் பயன்படுத்தி அவர்களைக் காப்பாற்ற வேண்டும். இதுவரை உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு கல்வித்தகுதிக்கு ஏற்ற அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
    Next Story
    ×