search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்.கே.நகரில் தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி: நல்லகண்ணு பேட்டி
    X

    ஆர்.கே.நகரில் தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி: நல்லகண்ணு பேட்டி

    ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் அமோக வெற்றி பெறுவார். அவரது வெற்றிக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி துணை நிற்கும் என்று அக்கட்சியின் தேசிய குழு உறுப்பினர் நல்லகண்ணு கூறினார்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய குழு உறுப்பினர் நல்லகண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஒக்கி புயலால் கன்னியாகுமரி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்களின் நிலை என்ன? என்பது தெரியாமல் அவர்களுடைய குடும்பத்தினர் பரிதவித்து வருகின்றனர். புயலில் மாயமான மீனவர்களை உடனே மீட்க வேண்டும்.

    கேரள மாநிலத்தில் அறிவித்துள்ளது போன்று, தமிழகத்திலும் புயலில் சிக்கி இறந்த மீனவர்களுக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உடனே சீரமைத்து அங்கு மின்சாரம், சாலை, போக்குவரத்து வசதி செய்து தர வேண்டும். சேதம் அடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும்.

    ஒக்கி புயலால் தூத்துக்குடி மாவட்டத்திலும் 6 லட்சம் வாழைகள் மற்றும் நெற்பயிர்கள் சேதம் அடைந்து உள்ளன. கடந்த 2 ஆண்டுகளுக்கான பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகையை வழங்காமல் இழுத்தடித்து வருகின்றனர். தனியார் நிறுவனங்கள் மூலம் பயிர் காப்பீடு செய்ததால்தான் இத்தகைய நிலை ஏற்பட்டு உள்ளது. இனி வரும் காலங்களில் எல்.ஐ.சி. போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் பயிர் காப்பீடு செய்ய வேண்டும்.


    ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியினரின் அழுத்தம் காரணமாகத்தான் விஷாலின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆளுங்கட்சியின் மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றவர்கள்கூட தோற்று உள்ளனர். ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் அமோக வெற்றி பெறுவார். அவரது வெற்றிக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி துணை நிற்கும்.


    தமிழகத்தில் கவர்னரின் செயல்பாடு இரட்டை ஆட்சி நடைபெறுவதை காட்டுகிறது. கவர்னர், கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக செயல்படுகிறார். தமிழகத்தில் மணல் குவாரிகளை 6 மாதங்களுக்குள் மூட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. ஆனால் 6 மாதங்கள் வரை மணல் அள்ளினாலே தமிழகம் பாலைவனமாகி விடும். இது அதிகபட்ச காலமாகும். எனவே மணல் குவாரிகளை உடனே மூட உத்தரவிட வேண்டும். வெளிநாடுகளில் இருந்து ஆற்று மணலை கொள்முதல் செய்து, குறைந்த விலைக்கு விற்பனைக்கு கொண்டு வர ஏற்பாடு செய்ய வேண்டும்.

    பட்டாசு, தீப்பெட்டி, கடலை மிட்டாய், பனியன் தொழிற்சாலை போன்றவற்றுக்கு ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். இல்லையெனில் அவற்றுக்கு வரி குறைவாக விதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×