search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மிகப்பெரிய வெள்ள பாதிப்பு ஏற்படும்: பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை
    X

    தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மிகப்பெரிய வெள்ள பாதிப்பு ஏற்படும்: பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை

    அரசு நில ஆக்கிரமிப்புகளை அகற்றாவிடில் தஞ்சை, திருவாரூர் மாவட்ட பகுதியில் மிகப்பெரிய வெள்ளம் தேங்கிமுற்றிலுமாக அழிந்துவிடும் என பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த செங்காங்காட்டில் கடல்சீற்றம் காரணமாக கடல்நீர் உட்புகுந்து விவசாய நிலங்களை மூழ்கடித்த பகுதிகளை தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் பார்வையிட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட பகுதிகளில் பெய்யும் பருவமழை நீரானது முத்துப்பேட்டை கடல் வழியாகத்தான் வடிய வேண்டும். முத்துப்பேட்டை அருகே கடலுக்கும் செங்காங்காட்டுக்கும் இடைப்பட்ட சுமார் 7 கிலோ மீட்டர் தூர நிலப்பரப்பில் தேங்கித் தான் மழைநீர் கடலில் வடியவேண்டும். கடலானது காலை 6 மணி துவங்கி மாலை 6 மணி வரை 12 மணிநேரம் தான் உள்வாங்கும்.

    இரவு முதல் காலை வரையிலும் வந்துசேரும் வெள்ளநீரானது அதுவரையில் இந்த நிலப்பரப்பில் தேங்கிநிற்கும். அந்த நிலப்பரப்பானது அரசு புறம்போக்கு நிலங்களாக முன்பு இருந்தது. பின்னர் ஆக்கிரமிப்புகுள்ளாகி சிலருக்கு பட்டா போட்டு வழங்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் தற்போது இறால் பண்ணைகளாக பயன்பாட்டில் உள்ளன. இதனால் மேலிருந்து வரும் வெள்ளநீரானது நிலப்பரப்பில் தேங்கி வடியமுடியாமல் விளை நிலங்களில் புகும்நிலை ஏற்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் முழுவதும் வெள்ளநீர் வழிந்தோடவழியின்றி கடல் முகத்துவாரங்கள் அடைக்கப்பட்டு உள்ளது.

    இந்நிலையில் ஒக்கி புயல் காரணமாக கடல்சீற்றம் ஏற்பட்டு கரையை தாண்டிய கடல்நீர் செங்காங்காடு விளைநிலத்தில் புகுந்து வெளியேற முடியாமல் தேங்கிவிட்டது.

    எனவே பாதிப்புகளை உணர்ந்து பொதுப் பணித்துறை செயலாளர், காவல்துறை தலைவர், வருவாய்த்துறை ஆணையர் தலைமையில் குழு அமைத்து ஆய்வு செய்து கடலோர ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

    கோடியக்கரை துவங்கி அதிராம்பட்டிணம் வரையில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து இயங்கும் இறால் பண்ணைகளை முற்றிலுமாக அகற்றினால் மட்டுமே வெள்ள பாதிப்பை தவிர்க்க முடியும். இல்லாவிடில் தஞ்சை, திருவாரூர் மாவட்ட பகுதியில் மிகப்பெரிய வெள்ளம் தேங்கிமுற்றிலுமாக அழிந்துவிடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×