search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறும்: வைகோ
    X

    ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறும்: வைகோ

    ஆர்.கே.நகரில் நடைபெறும் தேர்தலில் ஆளும் கட்சியினர் எவ்வளவு கோடிகளை கொட்டினாலும் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி என வைகோ தெரிவித்துள்ளார்.
    நெல்லை:

    அம்பேத்கார் நினைவு தினத்தையொட்டி நெல்லை சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஒக்கி புயலால் குமரி மாவட்டத்தில் அதிகளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. 2100 மீனவர்கள் மாயமாகி உள்ளனர். வீட்டிற்கு ஒருவர் அல்லது 2 பேர் இறந்துள்ளனர். ஒரே குடும்பத்தில் 3 பேரும் பலியாகி உள்ளனர். இந்த வி‌ஷயத்தில் தமிழக அரசு அக்கறை காட்டவில்லை. மாயமான மீனவர்கள் குறித்து அதிகாரிகள் சரியான கணக்கெடுப்பு நடத்தவில்லை.

    இறந்த மீனவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். ஒக்கி புயலை தேசிய பேரிடராக அறிவித்து குமரியில் பேரிடர் மையம் அமைக்க வேண்டும். தமிழகத்தில் ஆட்சி நடப்பதாக தெரியவில்லை. அரசு பணிகள் ஸ்தம்பித்துள்ளன. ஆர்.கே.நகரில் ஏற்கனவே பணப்பட்டுவாடா விவகாரம் தொடர்பாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அப்போது அமைச்சர்கள் மீதும் குற்றச்சாட்டு எழுந்தது.


    இந்நிலையில் ஆர்.கே.நகரில் நடைபெறும் இடைத்தேர்தலில் ஆளும் கட்சியினர் மீண்டும் பணப்பட்டுவாடா செய்ய திட்டமிட்டுள்ளனர். அவர்கள் எவ்வளவு கோடிகளை கொட்டினாலும் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி.

    தி.மு.க. வெற்றிக்கு ம.தி.மு.க. பாடுபடும். மத்திய பா.ஜ.க. அரசு இந்தியாவின் மதசார்பற்ற தன்மைக்கும் கூட்டாட்சி தத்துவத்துக்கும் வேட்டு வைக்கும் விதத்தில் செயல்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×