search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்நாட்டில் முதன் முறையாக கோவையில் ஜெயலலிதா முழு உருவ சிலை திறப்பு
    X

    தமிழ்நாட்டில் முதன் முறையாக கோவையில் ஜெயலலிதா முழு உருவ சிலை திறப்பு

    தமிழ்நாட்டில் முதன் முறையாக ஜெயலலிதாவுக்கு முழு உருவ சிலை கோவையில் திறக்கப்பட்டது.
    கோவை:

    கோவை அவினாசி ரோட்டில் அண்ணா முழு உருவ வெண்கல சிலை உள்ளது. இந்த இடம் அண்ணா சிலை சந்திப்பு என்றே அழைக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி அண்ணா சிலையை மீண்டும் புதுப்பிக்கும் பணி நடந்தது. நேற்று காலை சிலையை சுற்றி இருந்த மறைப்புகள் அகற்றப்பட்டபோது அண்ணா சிலையோடு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது முழு உருவ வெண்கல சிலைகளும் புதிதாக அமைக்கப்பட்டு இருந்தன.

    7 அடி உயரத்தில் ஒரே பீடத்தில் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோர் இரட்டை விரலை உயர்த்தி காண்பிப்பது போலவும், அண்ணா ஒருவிரலை உயர்த்தி காண்பிப்பது போலவும் இந்த சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. இவை நேற்று திறக்கப்பட்டன.
    தமிழக முதல்-அமைச்சராக பதவி வகித்த ஜெயலலிதா மறைந்து ஒரு ஆண்டு ஆகும் நிலையில், கோவையில் அவருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே முதன் முறையாக ஜெயலலிதாவுக்கு முழு உருவ சிலை நிறுவப்பட்டு இருப்பது கோவையில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    இது குறித்து தி.மு.க. எம்.எல்.ஏ. கார்த்திக் கூறியதாவது:-

    நெடுஞ்சாலை ஓரங்களில் புதியதாக சிலைகள் அமைக்க அரசு அனுமதி வழங்குவது இல்லை. சமீபத்தில் கோர்ட்டு உத்தரவுப்படி சென்னை மெரினா கடற்கரையோரம் அமைக்கப்பட்டிருந்த நடிகர் சிவாஜி கணேசன் சிலை அகற்றப்பட்டது. இந்நிலையில் கோவையில் அண்ணா சிலை அருகில் எவ்வித முன்அறிவிப்பும் இன்றி எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருக்கு சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

    இந்த சிலைகள் அமைக்க சட்டப்படி அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதா? என தெரியவில்லை. இப்பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெருக்கடி இருக்கும். தற்போது கூடுதலாக 2 சிலைகள் அமைக்கப்பட்டு உள்ளது போக்குவரத்து பாதிப்பை அதிகரிக்க செய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இது குறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறுகையில், விதிமுறைப்படி உரிய அனுமதி பெற்று ஏற்கனவே ஒதுக்கப்பட்ட இடத்தில் தான் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகள் வைக்கப்பட்டுள்ளன என்றார்.

    Next Story
    ×