search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வருமான வரி -கவர்னர் ஆய்வு: அ.தி.மு.க.வின் செல்வாக்கை வீழ்த்தி பா.ஜனதா காலூன்ற திட்டமா?
    X

    வருமான வரி -கவர்னர் ஆய்வு: அ.தி.மு.க.வின் செல்வாக்கை வீழ்த்தி பா.ஜனதா காலூன்ற திட்டமா?

    அ.தி.மு.க.வின் செல்வாக்கை வீழ்த்தி தமிழகத்தில் காலூன்றுவதற்கு பா.ஜனதா திட்டம் போடுகிறதோ? என தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை:

    ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் தமிழக அரசியல் களம் அதிரடி மாற்றங்களை சந்தித்து வருகிறது. வருமான வரி சோதனை என்பது அடிக்கடி நடந்து வருகிறது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தலைமை செயலாளராக இருந்த ராமமோகன ராவ் வீட்டிலும், தலைமை செயலகத்திலும் சோதனை நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

    இந்த நிலையில் சசிகலா குடும்பத்தினரின் வீடுகளை குறிவைத்து வருமானவரி துறையினர் சோதனை நடத்தி உள்ளனர். 5 நாட்களாக நடத்தப்பட்ட இந்த சோதனையில் கோடிக் கணக்கான ரூபாய் மதிப்பி லான ஆவணங்கள் சிக்கி உள்ளன.

    உச்சக்கட்டமாக ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டனில் புகுந்து வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தியது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வருமான வரித்துறையினர் நடவடிக்கை அ.தி.மு.க. தலைவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர்களும் இந்த சோதனை மனவேதனையை அளிப்பதாகவே கூறியுள்ளனர்.

    இதுபோன்ற சூழ்நிலைக்கு சசிகலா குடும்பமே காரணம் என்று அவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இருப்பினும் அ.தி.மு.க.வின் செல்வாக்கை சரியவைக்க பா.ஜனதா கட்சியினர் செய்யும் சூழ்ச்சியே இது என்று அ.தி.மு.க.வின் அடிமட்ட தொண்டர்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

    சசிகலா குடும்பத்தினரை மட்டுமே குறி வைத்து நடத்தப்பட்ட இந்த சோதனை ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் போய் முடிந்திருப்பதை அ.தி.மு.க. நிர்வாகிகள் விரும்பவில்லை.

    இதன் மூலம் அ.தி.மு.க.வின் செல்வாக்கை வீழ்த்தி தமிழகத்தில் காலூன்றுவதற்கு பா.ஜனதா திட்டம் போடுகிறதோ? என்கிற சந்தேகத்தையும் எழுப்புகிறார்கள் எம்.ஜி.ஆரின் ரத்தத்தின் ரத்தங்கள்.

    இந்த ஆய்வின் மூலம் தமிழகத்தில் பா.ஜனதா கட்சி தங்களை நிலை நிறுத்திக் கொள்ள காய் நகர்த்தி வருவதாகவும் அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

    கவர்னர் பன்வாரிலால் புரோகித் மேற்கொண்ட ஆய்வு நடவடிக்கையையும் அ.தி.மு.க.வினர் விரும்ப வில்லை என்றே கூறப்படுகிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் வெளிப்படையாக தங்களது எதிர்ப்பை காட்ட வில்லை என்றாலும், அ.தி.மு.க.வினர் மத்தியில் இது அடக்கி ஆளும் போக்காகவே பார்க்கப்படுகிறது.

    இதுபோன்ற நடவடிக்கைகள் மூலமாக தமிழக மக்கள் மனதில் இடம் பெற்று விடலாம் என்றே பாரதிய ஜனதா கட்சியினர் கணக்கு போட்டு வைத்துள்ளனர். பா.ஜனதாவின் இந்த எண்ணம் அரசியல் களத்தில் அவர்கள் காலூன்றுவதற்கு பயன்படுமா? என்பது புரியாத புதிராகவே உள்ளது.

    தி.மு.க உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் அனைத்தும் பா.ஜனதாவின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் அ.தி.மு.க. மட்டும் மென்மையான போக்கை கடைபிடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×