search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலம் அருகே ஆம்னி வேன் மோதி தனியார் ஆஸ்பத்திரி ஊழியர் பலி
    X

    சேலம் அருகே ஆம்னி வேன் மோதி தனியார் ஆஸ்பத்திரி ஊழியர் பலி

    ஆம்னி வேன் மோதி தனியார் ஆஸ்பத்திரி ஊழியர் பலியானார். மகனுக்கு பெண் பார்த்து விட்டு திரும்பிய போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள மோலாண்டபட்டியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 50).

    இவர் சேலம் மாமாங்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அட்டெண்டராக பணி புரிந்து வந்தார்.நேற்று ஒமலூர்-மேச்சேரி சாலையில் பட்சிணம்பட்டி அருகே மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே மேச்சேரியில் இருந்து ஒமலூர் நோக்கி ஒரு பஸ் வந்தது. இந்த பஸ்சை ஒரு ஆம்னி வேன் முந்தி செல்ல முயன்றது. அப்போது எதிரே மொபட்டில் வந்த கந்தசாமி மீது ஆம்னி வேன் பயங்கரமாக மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட கந்தசாமி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். பின்னர் சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக இறந்தார். இதை பார்த்த ஆம்னி வேன் டிரைவர் வேனை அங்கு நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டார். இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் ஆம்னி வேனின் முன் பகுதி நொறுங்கி சேதம் அடைந்தது.

    தகவலறிந்த ஓமலூர் போலீசார் அங்கு விரைந்து சென்று கந்தசாமி உடலை மீட்டு ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்கு காரணமான ஆம்னி வேனை பறிமுதல் செய்த போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே தகவல் அறிந்த கந்தசாமியின் உறவினர்கள் ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் திரண்டனர். அங்கு வைக்கப்பட்டிருந்த அவரது உடலை பார்த்து கதறி அழுது புரண்டனர். இன்று கந்தசாமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

    விபத்தில் இறந்த கந்தசாமிக்கு கோவிந்தம்மாள் என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். விசாரணையில் மகன் பொன்தேவனுக்கு பெண் பார்த்து விட்டு வீட்டுக்கு திரும்பிய போது விபத்து நடந்தது தெரியவந்தது.
    Next Story
    ×