search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீதான வருமானவரி நோட்டீஸ் ரத்து: ஐகோர்ட்டு உத்தரவு
    X

    ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீதான வருமானவரி நோட்டீஸ் ரத்து: ஐகோர்ட்டு உத்தரவு

    ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீதான வருமானவரி நோட்டீஸை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    சென்னை:

    முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அவரது மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்து இருந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    கர்நாடக மாநிலம் குடகுமலையில் எங்களுக்கு சொந்தமான 200ஏக்கர் பரப்பளவில் காபி எஸ்டேட் உள்ளது. இங்கு விளையும் காபிக்கொட்டை, மிளகு போன்ற விவசாய பொருட்கள் மூலம் வருமானம் கிடைக்கிறது.

    2009-10 ஆண்டுகளில் வருமானவரி கணக்கை வருமான வரித்துறையிடம் சமர்பித்து இருக்கிறோம். அப்போது விவசாய பொருட்களுக்கான வருமானத்துக்கு வரி சலுகையை பெற்று உள்ளோம்.


    6 ஆண்டுகளுக்கு பிறகு 2016 டிசம்பர் 29-ந் தேதி வருமானவரி கணக்கை மீண்டும் சரிபார்க்க வேண்டும் என்று கூறி ஆவணங்களுடன் நேரில் ஆஜராகும்படி வருமானவரி உதவி கமி‌ஷனர் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இந்த நோட்டீசை ரத்து செய்ய வேண்டும். அரசியல் காரணங்களுக்காக வருமான வரித்துறை இதுபோன்ற நடவடிக்கையை எடுத்துள்ளது.

    வருமானவரி சட்டத்தின் படி முறையான கணக்கு காட்டி விவசாய பொருட்களுக்கான வருமான வரி சலுகையை பெற்றுள்ளோம். இதில் எந்த விதிமுறை மீறலும் இல்லை. அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்குடன் வருமானவரித்துறையினர் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும். விளக்க நோட்டீசை ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

    கடந்த ஜனவரி மாதம் நீதிபதி ராஜீவ் ‌ஷக்தேர் இந்த வழக்கை விசாரித்து வருமானவரித்துறை நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்தார்.


    இந்த நிலையில் நீதிபதி டி.எஸ்.சிவஞானம் இந்த வழக்கை விசாரித்து பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-

    6 ஆண்டுகளுக்கு பிறகு குறிப்பிட்ட ஒரு குடும்பத்தின் வருமானவரி கணக்கை வருமானவரித்துறை மறு ஆய்வு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் மனுதாரரின் வருமானம் குறித்து 2011-ம் ஆண்டே விசாரணை நடத்தி அது தொடர்பான ஆவணங்களை முடித்து வைத்து வருமானவரித்துறை உத்தரவு பிறப்பித்து இருந்தது.

    எனவே இதுகுறித்து மீண்டும் 2011-ம் ஆண்டு விசாரணை நடத்துவதை ஏற்றுக்கொள்ள இயலாது.

    மனுதாரர்களின் காபி எஸ்டேட்டில் கிடைத்த வருமானத்தில் வரியை நிர்ணயம் செய்து அதற்கு அபாரதமும் விதித்துள்ளனர். இதையும் ஏற்க முடியாது.

    வருமான வரித்துறையின் விளக்க நோட்டீஸ் மற்றும் அபராதம் விதித்த உத்தரவு ஆகியவற்றை ரத்து செய்கிறேன்.

    இவ்வாறு நீதிபதி அந்த உத்தரவில் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×