search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதா மரணம் குறித்து விரைவில் விசாரணையை தொடங்க வேண்டும்: தி.மு.க- பா.ஜனதா வலியுறுத்தல்
    X

    ஜெயலலிதா மரணம் குறித்து விரைவில் விசாரணையை தொடங்க வேண்டும்: தி.மு.க- பா.ஜனதா வலியுறுத்தல்

    ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றி முரண்பாடான தகவல்கள் வெளியாவதால், அவரது மரணம் குறித்த விசாரணையை விரைவில் தொடங்க வேண்டும் என்று தி.மு.க. மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.
    சென்னை:

    தமிழக முதல்- அமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந் தேதி திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டது.

    இதனால் சென்னையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர், 74 நாட்கள் சிகிச்சை அளித்தும் பலன் இன்றி டிசம்பர் 5-ந்தேதி மரணம் அடைந்தார். ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோது, மிக முக்கியமான பிரமுகர்கள் கூட அவரை நேரில் பார்க்க அனுமதிக்கப்படவில்லை.

    ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருந்த நாட்களில் இட்லி சாப்பிட்டதாகவும், ஆப்பிள் சாப்பிட்டதாகவும், டாக்டர்கள், நர்சுகளிடம் பேசியதாகவும் அவ்வப்போது தகவல்கள் வெளியாயின. அவரது உடல்நிலை தேறி வருவதாகவும் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் கூறினார்கள்.

    ஆனால் டிசம்பர் 5-ந் தேதி ஜெயலலிதாவின் இதயம் திடீரென்று செயல் இழந்ததாகவும், இதனால் அவர் மரணம் அடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டது.

    ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு தரப்பில் சந்தேகங்கள் எழுப்பப்பட்டதால் சர்ச்சைகள் எழுந்தன. இதைத்தொடர்ந்து, அவரது மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால் இன்னும் விசாரணை கமிஷன் அமைக்கப்படவில்லை.

    இந்த நிலையில், ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திடீரென்று பரபரப்பான தகவல்களை வெளியிட்டு உள்ளார்.

    மதுரை பழங்காநத்தத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசுகையில், “ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா இட்லி, சட்னி சாப்பிட்டார் என்று நாங்கள் சொன்னது எல்லாம் பொய். உண்மையிலேயே நாங்கள் யாருமே அதை பார்க்கவில்லை. மக்கள் நம்பவேண்டும் என்பதற்காக நாங்கள் இவ்வாறு சொன்னோம். இதற்காக எங்களை மன்னித்துக்கொள்ளுங்கள்” என்று கூறினார்.

    அவர் இவ்வாறு கூறியது கூட்டத்தினர் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

    ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பொய் சொன்னதாக மூத்த அமைச்சர் ஒருவரே இவ்வாறு பகிரங்கமாக கூறி இருப்பது, புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


    ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றி முரண்பாடான தகவல்கள் வெளியாகி இருப்பதால், அவரது மரணம் குறித்து விசாரணையை விரைவில் தொடங்க வேண்டும் என்று எதிர்க்கட்சியான தி.மு.க. வலியுறுத்தி இருக்கிறது.

    இதுகுறித்து அக்கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

    ஜெயலலிதா மரணம் குறித்து நாங்கள் தொடக்க காலத்தில் இருந்தே முறையான விசாரணை வைக்க வேண்டுமென தெளிவாக சொல்லிக்கொண்டு இருக்கிறோம்.

    அதுமட்டுமல்லாமல் இப்போது குதிரைபேர ஆட்சி நடத்திக்கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமியும் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று சொன்னார். இந்த ஆட்சியோடு கைகோர்த்து துணை முதல்-அமைச்சர் பதவி வகித்துக்கொண்டிருக்கும் ஓ.பன்னீர்செல்வம், சி.பி.ஐ. விசாரணை வைக்க வேண்டும் என்று கேட்டார்.

    விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று சொன்னார்களே தவிர, எந்த நீதிபதி விசாரிப்பார் என்ற தெளிவான அறிவிப்பு கிடையாது. ஏன் இன்னும் விசாரணை தொடங்கவில்லை எனவும் தெரியவில்லை. உண்மையான, முறையான விசாரணை நடந்தால் தான் நாட்டுக்கு உண்மைநிலை தெரிய வரும்.

    நான் சட்டமன்றத்தில் குட்காவை ஆதாரத்தோடு எடுத்து காண்பித்த பிறகு தான், தமிழகம் முழுவதும் எங்கு பார்த்தாலும் தடை செய்யப்பட்ட பொருட்களை கைப்பற்ற திடீர் சோதனை நடந்து கொண்டு இருக்கிறது. அதை முதலில் டி.ஜி.பி. கண்டுபிடிக்கட்டும்.

    அதேபோல அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரும் மாமூல் வாங்குவதை முதலில் நிறுத்தட்டும். இவர்களுக்கெல்லாம் மாமூல் கொடுக்கப்படுகிறது என்பதை ஆதாரங்களோடு வருமான வரித்துறையே சொல்லி இருக்கிறது. சட்டம்-ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டு இருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.


    இதே கோரிக்கையை பாரதிய ஜனதாவும் வலியுறுத்தி இருக்கிறது.

    வடசென்னை மாவட்ட பாரதிய ஜனதா சார்பில், ஓட்டேரியில் பொது மருத்துவ முகாமை நேற்று தொடங்கி வைத்த அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், “ஜெயலலிதாவின் மரணம் குறித்த சந்தேகங்களுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. அமைச்சர்கள் ஒவ்வொருவரும் ஒரு கருத்தை சொல்லி வருகிறார்கள். எனவே மாநில அரசு உடனடியாக விசாரணை ஆணையம் மூலம் அதை தெளிவுபடுத்த வேண்டும்” என்றார்.

    இதற்கிடையே, தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை சந்திப்பதற்காக கர்நாடக மாநிலம் குடகு சென்ற அ.தி.மு.க. அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், ஜெயலலிதா மரணம் தொடர்பான எந்த விசாரணையை கண்டும் தாங்கள் அஞ்சவில்லை என்றார்.

    அவர் மேலும் கூறுகையில், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான வீடியோ பதிவு தங்களிடம் இருப்பதாகவும், சசிகலாவின் ஒப்புதல் இன்றி அதை வெளியிட முடியாது என்றும், விசாரணை கமிஷன் அமைத்தாலோ அல்லது சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டாலோ உரிய நேரத்தில் வீடியோ பதிவை வழங்குவோம் என்றும் தெரிவித்தார்.
    Next Story
    ×