search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    20 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் ஜெயலலிதா சொத்து வரி வழக்கு
    X

    20 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் ஜெயலலிதா சொத்து வரி வழக்கு

    ஜெயலலிதா மரணத்துக்கு பிறகும் சொத்து வரி வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் 20 ஆண்டுகளாக இன்னும் நிலுவையில் இருந்து வருகிறது.
    சென்னை:

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா 1993-94-ம் ஆண்டில் சொத்து வரி கணக்கை காட்டவில்லை என்று 1997-ம் ஆண்டு சொத்து வரி உதவி கமி‌ஷனர் எழும்பூரில் உள்ள கூடுதல் தலைமை மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் (பொருளாதார குற்றவியல்) வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி ஜெயலலிதா தாக்கல் செய்த மனு 2008-ம் ஆண்டு பிப்ரவரி 25-ந்தேதி தள்ளுபடியானது.

    இதையடுத்து அவர் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை ஏற்று ஜெயலலிதாவை சொத்து வரி வழக்கில் இருந்து 2011-ம் ஆண்டு ஐகோர்ட்டு விடுவித்தது.

    இதை எதிர்த்து வருமான வரித்துறை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. சென்னை ஐகோர்ட்டின் உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஜெயலலிதா மீதான சொத்து வரி வழக்கு எழும்பூர் கோர்ட்டில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரி அவர் மீண்டும் தாக்கல் செய்த மனு 2014-ம் ஆண்டு தள்ளுபடியானது. இதனால் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்றது.

    இந்த நிலையில் ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ந்தேதி மரணம் அடைந்தார். அவரது மரணத்துக்கு பிறகும் சொத்து வரி வழக்கு எழும்பூர் கோர்ட்டில் 20 ஆண்டுகளாக இன்னும் நிலுவையில் இருந்து வருகிறது.

    இந்த வழக்கை முடித்து வைக்க எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.

    ஜெயலலிதாவின் வக்கீலோ அல்லது வருமான வரித்துறையின் வக்கீலோ இறப்பு சான்றிதழை கோர்ட்டில் சமர்ப்பித்து இந்த வழக்கை முடிக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    Next Story
    ×