search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொதுக்குழுவில் சசிகலாவை நீக்க திட்டமா?: அழைப்பு கடிதத்தால் பரபரப்பு
    X

    பொதுக்குழுவில் சசிகலாவை நீக்க திட்டமா?: அழைப்பு கடிதத்தால் பரபரப்பு

    சென்னையில் 12-ந்தேதி கூடும் பொதுக்குழு கூட்டத்தில் சசிகலாவை நீக்க திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகிவரும் நிலையில், அழைப்பு கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    சென்னை:

    அ.தி.மு.க.வில் தற்போது நிலவிவரும் அசாதாரண சூழ்நிலையில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணியினரின் பொதுக்குழு கூட்டம் 12-ந்தேதி (செவ்வாய்கிழமை) காலை 10.35 மணிக்கு சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற இருக்கிறது.

    இந்த கூட்டத்தில், சுமார் 3 ஆயிரம் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர். அவர்களுக்கான அழைப்பு கடிதம் கொரியர் பதிவு தபால் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. கூட்டத்திற்கு வரும்போது, பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கவருடன் கூடிய அழைப்பிதழை உடன் கொண்டுவர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    எந்த முறையும் இல்லாத வகையில், இந்த முறை பொதுக்குழு உறுப்பினர்களை அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, “அழைப்பு கடிதம் கிடைத்துவிட்டதா?, கடிதத்துடன் பொதுக்குழு கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தி வருகின்றனர்.

    பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அழைப்பு கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா 5-12-2016 அன்று இம்மண்ணுலகை விட்டு மறைந்த நிலையில், நாம் 29-12-2016 அன்று நடைபெற்ற அவசர பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் சட்ட திட்ட விதி 20 (2)-ன்படி, கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால், பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்படும் வரை வி.கே.சசிகலா கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அவரால், பொதுச்செயலாளராக செயல்படாநிலை ஏற்பட்டதால், எம்.ஜி.ஆரால் நியமனம் செய்யப்பட்ட தலைமைக் கழக நிர்வாகிகள் கட்சியின் சட்ட திட்ட விதி 20 (5)-ன்படி ஒன்று கூடி கட்சியை வழிநடத்தி வருகிறோம்.

    இந்த நிலையில், பொதுக்குழு உறுப்பினர்களில் ஐந்தில் ஒருபகுதி எண்ணிக்கையினர், பொதுக்குழு கூட்டத்தை கட்சி சட்ட திட்ட விதி 19 (7)-ன்படி உடனடியாக கூட்டுமாறு தலைமைக் கழக நிர்வாகிகளிடம் விண்ணப்பித்ததின் அடிப்படையில் இப்பொதுக்குழுவானது கூட்டப்படுகிறது.

    கட்சியின் சட்ட திட்ட விதி 19 (7)-ன்படி ஓராண்டுக்கு ஒரு முறை பொதுக்குழு கூட்ட வேண்டும் என விதி உள்ளதாலும், கடந்த 2016-ம் ஆண்டுக்கான பொதுக்குழு கூட்டம் இன்னும் கூட்டப்படாத நிலையில் உள்ளதாலும், இப்பொதுக்குழுவானது 12-9-2017 செவ்வாய்கிழமை அன்று காலை 10.35 மணிக்கு கூட்டப்பட உள்ளது. கட்சி பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கூட்டத்திற்கு தவறாமல் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இந்த பொதுக்குழு கூட்டத்தில், தற்போது கட்சியில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு விவாதித்து முடிவு எடுக்கப்படும்.

    இவ்வாறு அந்த அழைப்பு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×