search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பண்ருட்டி அருகே காரில் கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் கஞ்சா பறிமுதல்: வாலிபர் சிக்கினார்
    X

    பண்ருட்டி அருகே காரில் கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் கஞ்சா பறிமுதல்: வாலிபர் சிக்கினார்

    பண்ருட்டி அருகே காரில் கடத்தி சென்ற ரூ.10 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்ட எல்லையான கண்டரக்கோட்டையில் போலீஸ் சோதனைச் சாவடி உள்ளது. இன்று அதிகாலை போலீசார் அங்கு வாகனங்களை சோதனை செய்தனர். அப்போது சென்னையில் இருந்து வேகமாக ஒரு கார் வந்தது. அந்த காரில் 4 பேர் இருந்தனர். அந்த காரை நிறுத்துமாறு போலீசார் சைகை காட்டினர்.

    ஆனால், அந்த கார் நிற்காமல் வேகமாக சென்றது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் இது குறித்து பண்ருட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் இது குறித்து மாவட்டம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்து உஷார்படுத்தினர்.

    இதற்கிடையே அந்த மர்ம கார் நேர் வழியாக செல்லாமல் குறுக்கு வழியாக மேல்கவரம்பட்டு என்ற இடத்துக்கு சென்றது. அந்த பகுதியில் செடிகள் அதிகமாக வளர்ந்திருந்தது. காரில் வந்தவர்கள் அங்கு இறங்கினார்கள். காரின் பின்பகுதியில் இருந்த சாக்கு மூட்டையை எடுத்து அருகில் இருந்த புதரில் மறைத்து வைத்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஊர்க்காவல் படையை சேர்ந்த முருகானந்தம் என்பவர் இதைப்பார்த்தார். உடனே அங்கு நின்றவர்களிடம் சந்தேகத்தின் பேரில் விசாரித்தார். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக கூறினர். இதனால் முருகானந்தம் அவர்களை பிடிக்க முயன்றார். அப்போது 3 வாலிபர்கள் திடீரென்று காரில் ஏறி தப்பி சென்றுவிட்டனர். ஒருவரை மட்டும் ஊர்க்காவல் படை வீரர் மடக்கி பிடித்தார்.

    பண்ருட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். உடனே பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர். புதரில் வீசப்பட்ட மூட்டையை எடுத்து பிரித்து பார்த்தனர். அதில் 100 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும்.

    மேலும் பிடிபட்ட வாலிபரை பண்ருட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இதற்கிடையே கஞ்சா கடத்தப்பட்ட சம்பவம் விழுப்புரம்-கடலூர் மாவட்ட போலீஸ் டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணனுக்கு தகவல் தெரிய வந்தது. உடனே அவர் பண்ருட்டி போலீஸ் நிலையத்துக்கு சென்று பிடிபட்ட வாலிபரிடம் விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் அந்த வாலிபர் தஞ்சையைச் சேர்ந்த மலைச்சாமி என்பதும், கஞ்சாவை ஆந்திரா மாநிலம் ராஜமுந்திரியில் இருந்து சென்னைக்கு ரெயிலில் கடத்தி கொண்டு வந்ததாகவும், அதன் பின்னர் காரில் கடத்தி சென்றது தெரிய வந்தது.

    மேலும் தப்பி ஓடிய 3 பேர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே காரில் தப்பி ஓடிய 3 பேரை பிடிக்க பண்ருட்டி இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ், சப்-இன்ஸ்பெக்டர் அழகிரி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் தப்பி ஓடி விட்ட 3 பேரையும் தீவிரமாக தேடிவருகின்றனர்.

    கஞ்சா கடத்தல் காரரை மடக்கி பிடித்த ஊர்க்காவல்படையை சேர்ந்த முருகானந்தத்தை டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் பாராட்டினார்.
    Next Story
    ×