search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பைக் விபத்தில் மூளைச்சாவு: வேலூர் வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்
    X

    பைக் விபத்தில் மூளைச்சாவு: வேலூர் வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்

    வேலூரில் பைக் விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்ய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    வேலூர்:

    வேலூர் அடுத்த மாதனூர் அனங்காநல்லூர் ஊராட்சி வாத்தியார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (55). விவசாயி. இவரது மனைவி கலைச்செல்வி (47). இவர்களுக்கு ஸ்ரீதர் (30), ஹேமானந்த், ஸ்ரீகாந்த் என்று 3 மகன்களும், சர்மிளா என்கிற ஒரு மகளும் உள்ளனர்.

    மூத்த மகன் ஸ்ரீதர் (30), பி.காம். பட்டதாரி. மாதனூர் அருகே ஓட்டல் நடத்தி வந்தார். ஸ்ரீதருக்கு இன்னும் திருமணமாகவில்லை. பெற்றோர், அவருக்கு பெண் பார்த்து வந்தனர்.

    இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு ஓட்டலை மூடிவிட்டு, ஸ்ரீதர் வீட்டிற்கு பைக்கில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். மாதனூர்- ஒடுகத்தூர் ரோட்டில் சென்ற போது, எதிரே வந்த பைக் மீது இவருடைய பைக் மோதி விபத்தில் சிக்கியது.

    இதில் படுகாயமடைந்த ஸ்ரீதர், வேலூரில் உள்ள சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தபோதும், இன்று காலையில் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.

    ஸ்ரீதரின் குடும்பத்தினர், அவரது உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க முன்வந்தனர். இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலமாக அகற்றி தானமாக பெறுவதற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    சி.எம்.சி. ஆஸ்பத்திரிக்கு ஒரு சிறுநீரகம், கல்லீரலும், சென்னை குளோபல் ஆஸ்பத்திரிக்கு இதயமும், சென்னை போர்ட்டிஸ் மலர் ஆஸ்பத்திரிக்கு நுரையீரலும், மியாட் ஆஸ்பத்திரிக்கு மற்றொரு சிறுநீரகமும் அளிக்கப்படுகிறது.

    சென்னையில் உள்ள 3 ஆஸ்பத்திரிகளுக்கு உடல் உறுப்புகளை சாலை மார்க்கமாக கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், குறிப்பிட்ட நேரத்தில் உடல் உறுப்புகளை கொண்டு செல்லவும், ஹெலிகாப்டர் மூலம் வான் வழி பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி காட்பாடியில் உள்ள வி.ஐ.டி. பல்கலைக் கழகத்தில் ஹெலிகாப்டர் இறங்கு தளம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதயம் உள்ளிட்ட உறுப்புகள் ஆம்புலன்சுகள் மூலமாக வி.ஐ.டி.க்கு கொண்டு செல்லப்படுகிறது.

    இதற்காக வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் இருந்து புதிய பஸ் நிலையம், காட்பாடி வழியாக வி.ஐ.டி. வரை போக்குவரத்து சரி செய்யப்பட்டுள்ளது.

    இன்று மதியம் 3 மணிக்கு மேல் சி.எம்.சி.யில் இருந்து போலீஸ் பாதுகாப்பு வாகனங்கள் முன்னாள் செல்ல, உடல் உறுப்புகள் ஆம்புலன்ஸ் மூலம் வி.ஐ.டி.க்கு செல்கிறது.

    அங்கிருந்து ஹெலிகாப்டரில் உறுப்புகள் சென்னைக்கு கொண்டு செல்லப்படுகிறது. சென்னை சென்ற பிறகு சம்பந்தப்பட்ட அந்தந்த ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் உடல் உறுப்புகள் பிரித்து கொண்டு செல்லப்படுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளும் சென்னையில் செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×