search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எம்.ஜி.ஆர். போல் கோட்டையை பிடிக்க முடியாது: ரஜினி, கமல் மீது முதல்வர் பழனிசாமி கடும் தாக்கு
    X

    எம்.ஜி.ஆர். போல் கோட்டையை பிடிக்க முடியாது: ரஜினி, கமல் மீது முதல்வர் பழனிசாமி கடும் தாக்கு

    நடிகராக இருப்பவர்கள் எல்லோரும் எம்.ஜி.ஆர். போல் கோட்டையை பிடிக்க முடியாது என்று ரஜினி, கமல் ஆகிய இருவரையும் எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடினார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

    அப்போது அவர், ரஜினியையும், கமலையும் மறைமுகமாக தாக்கி பேசினார். இருவரும் எம்.ஜி.ஆர். போல் ஆக முடியாது என்று கடுமையாக சாடினார்.

    கிராமப் பகுதிகளில் தேர்தல் நேரத்தில், “நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்கள்?” என்று கேட்டால், “எம்.ஜி.ஆருக்குத்தான் வாக்களித்தேன்” என்று கூறும் முதியோர்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள்.

    அரசின் சார்பில் இலவச வேட்டி சேலை வழங்கினால், “மகராசன் எம்.ஜி.ஆர். கொடுத்த வேட்டி சேலை” என்று கூறும் முதியோர் இன்றைக்கும் இருக்கிறார்கள்.

    எம்.ஜி.ஆருக்குப் பிறகு ஓஹி பெண் எம்.ஜி.ஆராக தமிழ்நாட்டிற்கு கிடைத்தவர், புரட்சித்தலைவி அம்மா. புரட்சித்தலைவர் தனது ஆட்சிக்காலத்தில் மக்களுக்காக தீட்டி இருந்த திட்டங்களை செவ்வனே செயல்படுத்தியவர் அம்மா.

    புரட்சித்தலைவர் வழியில் அம்மாவும் முன்னோடி திட்டங்கள் பலப்பல தந்து, மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளார்.

    இந்த மகத்தான இரண்டு தலைவர்களுமே இறைவன் அருளால் தமிழ்நாட்டிற்கு கிடைத்த வரம், கொடை. இதை எதிர்க்கட்சிக்காரர்களே ஒத்துக் கொள்வார்கள்.

    எம்.ஜி.ஆரைப் போல ஆக வேண்டும் என்று நினைப்பவர்கள் அதற்காக பல தியாகங்களைச் செய்ய வேண்டும்.

    மற்றவர்களை விமர்சனம் செய்வதையே தொழிலாகக் கொண்டவர்கள் ஒரு காலமும் எம்.ஜி.ஆர். ஆக முடியாது.

    தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல உலகத்திற்கே ஒரே எம்.ஜி.ஆர்.தான். எம்.ஜி.ஆராக கனவு காண்பவர்களின் நிலை புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதையாகத்தான் முடியும்.

    எம்.ஜி.ஆர். சினிமாவிலும், அரசியலிலும் எவரும் வீழ்த்த முடியாத அதிசய மனிதர். ஒரு நாட்டை ஒரு கலைவேந்தன் ஆள வேண்டும் என்று 200 ஆண்டுகளுக்கு முன்னர் தத்துவஞானி பிளாட்டோ கனவு கண்டார். அந்தக் கனவை எம்.ஜி.ஆர். தான் முதன்முதலில் நனவாக்கி காட்டினார்.

    வானத்தில் ஒரே பகலவனை, ஒரே சந்திரனைத்தான் பார்க்க முடியும். அதே போல எம்.ஜி.ஆர் என்பவர் இந்த உலகத்தில் ஒருவர்தான் இருக்க முடியும்.

    நடிகராக இருந்து தலைவராக உயர நினைப்பவர்கள், (ரஜினி, கமல்) மக்கள் களத்திற்கு வந்து மக்களுக்காக உழைக்க வேண்டும். மக்களின் இன்ப, துன்பங்களில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும்.

    பிறகு அவர்கள் எம்.ஜி.ஆர். ஆக உயர்கிறார்களா? இல்லையா? என்று மக்கள் தீர்மானிப்பார்கள். மக்கள் மனக்கோட்டையை பிடிக்க இயலாதவர்கள் புனித ஜார்ஜ் கோட்டையை ஒருகாலமும் பிடிக்க முடியாது.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×