search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தக்காளி விலை ரூ.90 ஆக குறைந்தது
    X

    தக்காளி விலை ரூ.90 ஆக குறைந்தது

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இன்று தக்காளி வரத்து சற்று அதிகரித்ததால் விலை கொஞ்சம் குறைந்துள்ளது.
    சென்னை:

    தக்காளி விலை கடந்த 1 வாரமாக கடுமையாக அதிகரித்து வந்தது. கடந்த மாதம்வரை தக்காளி 1 கிலோ ரூ.15 மற்றும் ரூ.20 விலையில் விற்கப்பட்டது. இந்த மாதம் பிறந்ததும் தக்காளி விலை தொடர்ந்து உயரத் தொடங்கியது.

    இந்த மாத தொடக்கத்தில் தக்காளி 1 கிலோ ரூ.30-க்கு விற்றது. பின்னர் ரூ.40, ரூ.50 என உயர்ந்து கொண்டே வந்தது. 3 நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.80-க்கு விற்றது.

    நேற்று 1 கிலோ தக்காளி ரூ.100 ஆக உயர்ந்தது. நேற்று கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த விலையில் தக்காளி கிலோ ரூ.90-க்கும், சில்லரை கடைகளில் ரூ.100-க்கும் விற்றது. சென்னையின் பிற பகுதிகளில் உள்ள சில்லரை கடைகளில் தக்காளி கிலோ ரூ.120 வரை விற்கப்பட்டது. தக்காளி விலை உயர்வால் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வழக்கமாக கிலோ கணக்கில் தக்காளி வாங்குபவர்கள் கூட தினசரி தேவைக்கு மட்டுமே தக்காளி வாங்கிச் சென்றனர்.

    தக்காளி எங்கே போய் நிற்குமோ என்று பெண்கள் ஆதங்கப்பட்டனர். அவர்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் தக்காளி விலை இன்று கொஞ்சம் குறையத் தொடங்கியது.

    கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த விலையில் நேற்று ரூ.90-க்கு விற்கப்பட்ட தக்காளி இன்று ரூ.10 குறைந்து கிலோ ரூ.80-க்கு விற்கப்படுகிறது. சில்லரை கடைகளில் ரூ.90-க்கு விற்கப்படுகிறது. இன்று கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து சற்று அதிகரித்ததால் விலை கொஞ்சம் குறைந்துள்ளது.

    இதேபோல் சின்ன வெங்காயமும் இன்று விலை குறைந்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் சில தினங்களுக்கு முன்பு கிலோ ரூ.120 வரை விற்கப்பட்ட சின்ன வெங்காயம் நேற்று ரூ.90-க்கு விற்கப்பட்டது. சில்லரை கடைகளில் ரூ.100-க்கு விற்கப்பட்டது. இன்று ரூ.10 குறைந்து ரூ.80 ஆக விற்கப்படுகிறது. சில்லரை விலையில் ரூ.90-க்கு விற்கப்படுகிறது.
    Next Story
    ×