search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆணவக் கொலையை தடுக்க தனி சட்டம்: மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு வலியுறுத்தல்
    X

    ஆணவக் கொலையை தடுக்க தனி சட்டம்: மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு வலியுறுத்தல்

    ஆணவக் கொலை தடுப்பு தனிச் சட்டத்தை தமிழக அரசு நடப்பு சட்டமன்றக் கூட்டத்திலேயே நிறைவேற்ற முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர்.
    சென்னை:

    இந்திய கம்யூனிஸ்டு மார்க்சிஸ்டு கட்சி மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக ஆணவக் கொலைகள் நடப்பது தொடர் செய்தியாக மாறிக் கொண்டிருக்கிறது. பெற்றோரே மகளை எரித்துக் கொல்வது, உற்றார் உறவினர்கள் ஒன்றாய் சேர்ந்து சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களை கொலை செய்வது உள்ளிட்ட மிகக் கொடூரமான சம்பவங்களை தமிழகம் கண்டு கொண்டிருக்கிறது.

    இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் பல இயக்கங்கள் ஆணவக் கொலையை தடுப்பதற்கு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.



    கடந்த சட்டமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவராக இருந்த சவுந்தரராசன் ஆணவக் கொலை தடுப்பு தனிச் சட்டத்திற்கான தனிநபர் மசோதாவை முன் மொழிந்தார். ஆனால் சட்டமன்ற செயலகம் சில குறைபாடுகள் இருப்பதாக கூறி உள்நோக்கத்துடன் அதை நிராகரித்து விட்டது.

    இந்த நிலையில் தான் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகவும், இச்சட்டத்தை கொண்டு வர மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சேலத்திலிருந்து சென்னை வரை கடந்த 9-ந் தேதி தொடங்கி நடைபயண இயக்கத்தை நடத்தி வருகிறது.

    ஆணவக் கொலைகளால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களைச் சார்ந்தவர்கள் தீண்டாமைக்கு எதிரான சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் மிகப்பெரிய அளவில் வரவேற்பு அளித்து வருகிறார்கள். இந்த நடைபயணம் இன்று சென்னையை வந்தடைகிறது.

    சாதி ஒடுக்குமுறையும், தீண்டாமையும், ஆணவக் கொலைகளும் பெருகி வரும் நிலையில் இவற்றை தடுப்பதற்கான ஒரு முயற்சியாக ஆணவக் கொலை தடுப்பு தனிச் சட்டத்தை தமிழக அரசு நடப்பு சட்டமன்றக் கூட்டத்திலேயே நிறைவேற்ற முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற் குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
    Next Story
    ×