search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவர்னரை தொகுதிக்குள் நுழைய விடக்கூடாது: எம்.எல்.ஏ.க்களுக்கு நாராயணசாமி உத்தரவு
    X

    கவர்னரை தொகுதிக்குள் நுழைய விடக்கூடாது: எம்.எல்.ஏ.க்களுக்கு நாராயணசாமி உத்தரவு

    கவர்னர் கிரண்பேடியை இனி எம்.எல்.ஏ.க்கள் தொகுதிக்குள் நுழைய விடக்கூடாது. அவரை மக்களை திரட்டி தடுக்க வேண்டும் என முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் தனக்குத்தான் அதிக அதிகாரம் உள்ளது என்று கூறி கவர்னர் கிரண்பேடி அரசின் ஒவ்வொரு நிர்வாக வி‌ஷயங்களிலும் தலையிட்டு வருகிறார்.

    இதனால் கவர்னருக்கும், முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்த நிலையில் உயர் மருத்துவ மாணவர் சேர்க்கை விவகாரத்தில் கவர்னர் தலையிட்டார். இதனால் முதல்-அமைச்சர் நாராயணசாமி கவர்னருக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக பேசினார். கவர்னர் வரம்பு மீறி செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.

    இதற்கு பதில் தெரிவிக்கும் வகையில் இன்று கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் கருத்து வெளியிட்டார். அதில் நாராயணசாமி நிர்வாகம் சம்மந்தமாக கடுமையாக விமர்சித்து இருந்தார்.

    இந்த பிரச்சனை இன்று சட்டசபையில் எதிரொலித்தது. காங்கிரஸ் எம்.எல்.ஏ. அனந்தராமன், தி.மு.க. எம்.எல்.ஏ. சிவா, அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அன்பழகன் ஆகியோர் சட்டசபையில் பூஜ்ய நேரத்தின் போது இந்த பிரச்சனையை எழுப்பி பேசினார்கள்.

    அவர்கள் பேசும்போது, கவர்னர் கிரண்பேடி தொடர்ந்து முதல்-அமைச்சரையும், அமைச்சர்களையும், அரசையும், எம்.எல்.ஏ.க்களையும் விமர்சித்து பேசிக் கொண்டிருக்கிறார். இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கூறினார்கள்.

    அதற்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி பதில் அளித்து பேசியதாவது:-

    கவர்னர் கிரண்பேடி தொடர்ந்து இப்படித்தான் செயல்பட்டு கொண்டிருக்கிறார். நான் ஒரு வருடமாக அவரை பற்றி எதுவும் பேசாமல் மவுனம் காத்து வந்தேன். ஆனால் அவர் தொடர்ந்து அத்துமீறி, கட்டுப்பாடுகளை மீறி செயல்படுகிறார். வேறு வழியில்லாமல் இதை எதிர்க்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.

    புதுவை கவர்னருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்று தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. டெல்லி கவர்னருக்கும், புதுவை கவர்னருக்கும் உள்ள அதிகாரங்கள் வெவ்வேறானவை.


    புதுவை கவர்னரை பொறுத்தவரை அமைச்சரவை என்ன சொல்கிறதோ? அதை கேட்டு செயல்பட வேண்டும். ஆனால் கிரண்பேடி இதை உணர்ந்து கொள்ளாமல் இஷ்டப்படி செயல்படுகிறார்.

    இதுபற்றி மத்திய அரசிடம் ஏற்கனவே புகார் தெரிவித்துள்ளேன். ஜனாதிபதி, பிரதமர், உள்துறை அமைச்சகம் ஆகியவற்றுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. ஆனாலும் அவர் தொடர்ந்து அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் செயலை செய்கிறார்.

    அமைச்சரவை அனுப்பும் கோப்புகளை உடனடியாக தீர்வு கண்டு அனுப்புவதாகவும், தன்னிடம் எந்த கோப்பும் தேக்கத்தில் இல்லை என்று கூறுகிறார். ஆனால் பல கோப்புகளை அங்கும், இங்கும் அனுப்பி சுற்றவிடுகிறார்.

    உதாரணத்திற்கு விவசாயிகளுக்கு கூட்டுறவு கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோப்பு அனுப்பினோம். அந்த கோப்பை சட்டத்துறைக்கு அனுப்பினார். அவர்கள் இது மாநில அரசின் வரம்புக்கு உட்பட்டது. அதற்கு ஒப்புதல் அளிக்கலாம் என்று கூறினார்கள். ஆனால் அந்த கோப்பை அவர் டெல்லிக்கு அனுப்பிவிட்டார்.

    இதுபோல ஆதிதிராவிட மாணவர்களுக்கான கடன் உள்ளிட்ட பல கோப்புகளும் இதே நிலையில் தான் உள்ளன. அவருடைய செயல்பாடுகளால் இப்படி ஒரு கவர்னர் நமக்கு தேவையா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் தனது வரம்புக்குள் செயல்பட வேண்டும். இல்லை என்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்.

    அவர் ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று பிரச்சனைகளை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்கிறார். இனி அவரை எம்.எல்.ஏ.க்கள் தொகுதிக்குள் நுழைய விடக்கூடாது. அவரை மக்களை திரட்டி தடுக்க வேண்டும்.

    கவர்னரை அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் சென்று சந்திக்க கூடாது. அமைச்சர்கள் உத்தரவு இல்லாமல் இனி கவர்னரை யாரும் சந்தித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அப்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அன்பழகன் கவர்னர் பிரச்சனை தொடர்ந்து நீடித்து கொண்டு இருக்கிறது. அவரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அல்லது அவரை திரும்ப பெறாவிட்டால் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்போம் என்று சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று கூறினார்.

    இதே கருத்தை தி.மு.க. எம்.எல்.ஏ. சிவா, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், அனந்தராமன், ஜெயமூர்த்தி ஆகியோரும் வலியுறுத்தினார்கள். அப்போது என்.ஆர். காங்கிரஸ் உறுப்பினர்கள் இந்த பிரச்சனைக்கு அரசுதான் காரணம் என்று கூறி விவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை பேச அனுமதிக்காததால் அவர்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
    Next Story
    ×