search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சித்திரை வசந்த உற்சவம்"

    • வசந்த உற்சவம் நிறைவாக மன்மத தகனம் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். சித்திரை மாதத்தில் சித்திரை வசந்த உற்சவ விழா நடைபெறும். இந்த விழா 10 நாட்கள் நடைபெறும்.

    இந்த ஆண்டிற்கான சித்திரை வசந்த உற்சவம் கடந்த 14-ந் தேதி தொடங்கியது. விழா நாட்களில் மகிழ மரத்தை வலம் வந்த உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரருக்கு பொம்மை பூ கொட்டும் நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக நடைபெற்றது.

    விழாவின் நிறைவாக நேற்று முன்தினம் அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து கோபால விநாயகர் கோவிலில் இரவு மண்டக படி நிகழ்ச்சி நடைபெற்றது.

    தொடர்ந்து கோவிலுக்குள் வந்த அருணாசலேஸ்வரர் கோவிலின் 3-ம் பிரகாரத்தில் மங்கள வாத்தியங்கள் முழங்க வலம் வந்து தங்க கொடிமரம் அருகே உள்ள சபா மண்டபத்தில் எழுந்தருளினார்.

    இதையடுத்து அருணாசலேஸ்வரர் ஆழ்ந்த தியானத்தில் சென்றுவிட்டார். தொடர்ந்து தன் மீது அம்பு எய்த மன்மதனை அருணாசலேஸ்வரர் எரிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

    20 அடி உயர பொம்மை

    சிவபெருமான் ஆழ்நிலை தியானத்தில் இருக்கும் போது உலகில் உள்ள அனைத்து நிகழ்வுகளும் நின்று இருள் சூழ்ந்து விடுவதால் அந்த தியானத்தை கலைப்பதற்காக தேவர்கள் மன்மதனை சாமி மீது அம்பு விட அனுப்பி வைக்கின்றனர்.

    மன்மதன் அருணாசலேஸ்வரர் மீது பானம் தொடுத்த நேரத்தில் அருணாசலேஸ்வரரின் தியானம் கலைந்து எதிரே இருந்த மன்மதனை தீப்பிழம்பால் சுட்டு அழித்தார். இந்த நிகழ்வையே மன்மத தகனம் என்று கூறப்படுகிறது.

    இதற்காக 20 அடி உயரம் கொண்ட மன்மதன் பொம்மை கையில் வில்லோடு அருணாசலேஸ்வரர் முன்பு நிறுத்தப்பட்டது. அப்போது மன்மதனை அருணாசலேஸ்வரர் தன் நெற்றிக்கண்ணால் சுட்டெரிக்கும் நிகழ்வு நடந்தேரியது.

    அருணாசலேஸ்வரர் முன்பிருந்து சீறி பாய்ந்து வந்த தீ மன்மதன் மீது பட்டு கொழுந்துவிட்டு எரிந்தது. இதில் மன்மதன் உருவம் முழுவதும் எரிந்து சாம்பலானது.

    அங்கிருந்தவர்கள் தங்களுடைய கர்ம வினைகள் போவதற்கும், பில்லி சூனியம் தங்களை அண்டாமல் இருப்பதற்கும், வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு கண் திருஷ்டிக்காக எரிந்த சாம்பலை எடுத்து சென்றார்கள்.

    இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மட்டும் மன்மத தகனம் நிகழ்ச்சி நடைபெறுவது சிறப்பு வாய்ந்ததாகும்.

    • அய்யங்குளத்தில் சூல ரூபத்திற்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.
    • பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் சித்திரை வசந்த உற்சவ விழா கடந்த 14-ந் தேதி தொடங்கியது. முன்னதாக 13-ந் தேதி மாலையில் கோவிலில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதியின் முன்பு பந்தக்கால் நடப்பட்டது.

    தொடர்ந்து கடந்த 14-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை இரவு மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெற்றது.

    பின்னர் கோவிலில் மகிழமரம் அருகில் சாமிக்கு பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சித்திரை வசந்த உற்சவம் நிறைவு விழாவையொட்டி நேற்று பகல் 12.30 மணியளவில் திருவண்ணாமலை அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.

    முன்னதாக உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தனித் தனி வாகனத்தில் எழுந்தருளி மாடவீதியை வலம்வந்தனர்.

     தீர்த்தவாரி

    பின்னர் அய்யங்குளத்திற்கு மங்கல வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர். அய்யங்குளத்தில் உள்ள மண்டபத்தில் சாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் அய்யங்குளத்தில் சூல ரூபத்திற்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பின்னர் அய்யங்குளத்திற்கு எதிரில் உள்ள அருணகிரிநாதர் கோவிலில் சாமிக்கும், பராசக்தி அம்மனுக்கும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையடுத்து இரவு கோபால விநாயகர் கோவிலில் சாமிக்கு மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெற்றது.

    இரவு 11 மணியளவில் அருணாசலேஸ்வரர் கோவில் கொடிமரம் அருகில் மன்மத தகனம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர், உறுப்பினர்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

    • இன்று மாலை 4.30 மணி முதல் மாலை 6 மணிக்குள் கோவில் மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள சம்பந்த விநாயகர் சன்னதி முன்பு பந்தக்கால் முகூர்த்தம் நடைபெறும்.
    • விழாவின் நிறைவாக 23-ந் தேதி காலை 10 மணிக்கு ஐயங்குளத்தில் தீர்த்தவாரியும், அன்று இரவு கோபால விநாயகர் கோவிலில் மண்டகபடியும் நடைபெறும்.

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் சித்திரை வசந்த உற்சவம் சிறப்புக்குரியது.

    அதன்படி, சித்திரை வசந்த உற்சவம் இன்று பந்தக்கால் முகூர்த்தத்துடன் தொடங்குகிறது.

    அதையொட்டி, இன்று மாலை 4.30 மணி முதல் மாலை 6 மணிக்குள் கோவில் மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள சம்பந்த விநாயகர் சன்னதி முன்பு பந்தக்கால் முகூர்த்தம் நடைபெறும்.

    நாளை முதல் வருகிற 23-ந் தேதி வரை தினமும் அருணாசலேஸ்வரருக்கும் உண்ணாமுலையம்மனுக்கும் சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடைபெறும். இரவு நேரத்தில் சாமிக்கு மண்டகபடியும் நடைபெறும்.

    விழாவின் நிறைவாக 23-ந் தேதி காலை 10 மணிக்கு ஐயங்குளத்தில் தீர்த்தவாரியும், அன்று இரவு கோபால விநாயகர் கோவிலில் மண்டகபடியும் நடைபெறும். நள்ளிரவு 12 மணி அளவில் கோவில் மூன்றாம் பிரகாரத்தில் தங்க கொடி மரம் முன்பு மன்மத தகனம் நிகழ்ச்சி நடைபெறும்.

    ×