search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தி.மு.க., அ.தி.மு.க.வினருக்கு சமூக நீதி பற்றி பேச என்ன தகுதி உள்ளது?- அன்புமணி கேள்வி
    X

    தி.மு.க., அ.தி.மு.க.வினருக்கு சமூக நீதி பற்றி பேச என்ன தகுதி உள்ளது?- அன்புமணி கேள்வி

    • தாத்தா, அப்பா, கணவர், மகன், பேரன், என 5 தலைமுறையினர் மதுவுக்கும், போதைக்கும் அடிமையாகி விட்டனர்.
    • தமிழக மக்களிடம் தற்போது மவுன அலைவீசி வருகிறது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் திலகபாமாவை ஆதரித்து நடந்த பொதுக்கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்த தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி 3வது முறையாக பதவியேற்பது முடிவாகி விட்டது. எனவே தமிழக மக்கள் சிந்தித்து தங்கள் வாக்கை செலுத்த வேண்டும். கடந்த தேர்தலில் தகுதி இல்லாதவரை தேர்வு செய்ததால் மக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இதே போல் இந்த முறையும் தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு வாக்களித்து உங்கள் வாக்கை வீணடிக்க வேண்டாம்.

    காமராஜர், அண்ணா காலத்தில் நேர்மையானவர்களை வேட்பாளர்களாக நிறுத்தினர். அதனால் வேட்பாளர்களை பார்க்காமல் சின்னத்தை பார்த்து வாக்களிக்கும் நிலை அப்போது இருந்தது. தற்போது நல்லவர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவதில்லை என்பதால் சின்னத்தை பார்த்து வாக்களிக்கும் பழக்கத்தை மக்கள் கைவிட வேண்டும்.

    கடந்த 57 ஆண்டுகளாக தி.மு.க., அ.தி.மு.க. என 2 கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்து தமிழகத்தை நாசமாக்கி விட்டன. தாத்தா, அப்பா, கணவர், மகன், பேரன், என 5 தலைமுறையினர் மதுவுக்கும், போதைக்கும் அடிமையாகி விட்டனர். இந்த 2 கட்சிகள் ஆட்சிக்கும் முடிவு கட்ட 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைப்போம். அதற்கான முன்னோட்டம்தான் இந்த பாராளுமன்ற தேர்தல்.

    இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவிக்க காரணமாக இருந்த காங்கிரசோடு தி.மு.க. கூட்டணி வைத்துள்ளது. இது கொள்கை கூட்டணியா? எங்களைப் பார்த்து கொள்கை இல்லாத கூட்டணி என கூறுகின்றனர். தி.மு.க.வும், காங்கிரசும் சேர்ந்து கச்சத்தீவை தாரை வார்த்தது. இதனால் இதுவரை 800 மீனவர்கள் இறந்துள்ளனர். 6100 பேர் கைதாகி 1250 படகுகள் பறிபோய் உள்ளது. பா.ஜ.க. கச்சத்தீவு பற்றி பேசுவதை குறைகூறும் தி.மு.க., காங்கிரஸ் இதுவரை அந்த பிரச்சனையில் மவுனமாக இருப்பது ஏன்? கச்சத்தீவை மீட்க பிரதமர் மோடியால்தான் முடியும்.

    தி.மு.க.விற்கு உழைத்தவர்கள் புறக்கணிக்கப்பட்டு இருக்கின்றனர். 34 அமைச்சர்களில் பட்டியல் இன சமுதாயத்தைச் சேர்ந்த 3 பேர் உள்ளனர். சி.வி.கணேசன், மதிவேந்தன், கயல்விழி ஆகிய 3 பேருக்கும் அமைச்சரவை வரிசையில் முறையே 30, 33, 34-வது இடம் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் சமூக நீதி பேசுவதற்கான தகுதியே இல்லாதவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். தி.மு.க. சார்பில் திண்டுக்கல் மாவட்டத்துக்கு 29 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. அதில் ஒன்றைக்கூட மு.க.ஸ்டாலின் நிறைவேற்றவில்லை. அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் உள்பட 5 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 7 மாநிலங்களில் புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு ஊழியர்களையும் வஞ்சித்து விட்டது தி.மு.க. அரசு. அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் யார் பிரதமர் என்றே சொல்ல முடியாத அளவுக்கு பிரசாரம் செய்து வருகின்றனர். அவர்களுக்கு அளிக்கும் வாக்கு வீண். இந்த 2 கட்சிகளுமே சமூக நீதி பற்றி பேச தகுதி இல்லாதவை. தமிழக மக்களிடம் தற்போது மவுன அலைவீசி வருகிறது. இது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக வாக்குகளாக மாறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×