search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரபல நிறுவனத்தின் முகப்பவுடர் பயன்படுத்திய பெண்ணுக்கு புற்றுநோய்: ரூ.2400 கோடி நஷ்டஈடு வழங்க உத்தரவு
    X

    பிரபல நிறுவனத்தின் முகப்பவுடர் பயன்படுத்திய பெண்ணுக்கு புற்றுநோய்: ரூ.2400 கோடி நஷ்டஈடு வழங்க உத்தரவு

    பிரபல நிறுவனத்தின் முகப்பவுடரை பயன்படுத்திய பெண்ணுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து அந்த பெண்ணுக்கு ரூ.2400 கோடி நஷ்ட ஈடு வழங்க கோர்ட் உத்தரவிட்டது.
    கலிபோர்னியா:

    அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவை சேர்ந்தவர் ஈவாஎச்சல்வேலியா (வயது 63). இவர் கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

    தனக்கு புற்றுநோய் ஏற்பட்டு இருப்பதற்கு பிரபல நிறுவனத்தின் முகப்பவுடர் தான் காரணம் என்று குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக அவர் கலிபோர்னியா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    அதில் நான் 11 வயதில் இருந்தே இந்த நிறுவனத்தின் முகபவுடரை பயன்படுத்தி வருகிறேன். இதன் காரணமாக எனக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த நிறுவனம் நஷ்டஈடு தர வேண்டும் என்று கேட்டிருந்தார்.

    இதுசம்மந்தமாக வழக்கு வந்தபோது, முகப்பவுடர் நிறுவனம் சார்பில் வக்கீல்கள் ஆஜராகி வாதாடினார்கள். அப்போது நீதிபதிகள் இந்த முகப்பவுடரை பயன்படுத்துவதால் புற்றுநோய் ஆபத்து இருக்கிறது என்பது பவுடர் நிறுவனத்திற்கு தெரியும். ஆனால் அதுபற்றிய குறிப்புகளை பவுடர் பாக்கெட்டில் வெளியிடவில்லை.

    எனவே அந்த பெண்ணுக்கு 410 மில்லியன் டாலர் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பு கூறினார்கள். இந்திய பண மதிப்புபடி இது ரூ.2400 கோடி ஆகும்.

    இவ்வளவு பெரிய தொகையை அபராதமாக விதித்தது அந்த நிறுவனத்துக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே இதை எதிர்த்து அப்பீல் செய்வதற்கு முடிவு செய்துள்ளது.

    மேலும் அந்த நிறுவனம் கூறும்போது விஞ்ஞான ரீதியில் தான் முகப்பவுடரை தயாரித்து விற்பனை செய்கிறோம். எங்கள் மீது எந்த தவறும் இல்லை என்று கூறினார்கள்.

    இந்த நிறுவனம் பன்னாட்டு அளவில் முகப்பவுடரை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்தியாவிலும் இதன் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதன் முகப்பவுடரை பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படுவதாக ஏற்கனவே ஆயிரக்கணக்கான பெண்கள் குற்றம் சாட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது. அவர்களில் பலர் கோர்ட்டுகளில் வழக்கு தொடர்ந்து நஷ்டஈடும் பெற்றுள்ளனர்.
    Next Story
    ×