search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜனாதிபதி டிரம்புடன் மோடி இன்று பேச்சுவார்த்தை - விசா கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமா?
    X

    ஜனாதிபதி டிரம்புடன் மோடி இன்று பேச்சுவார்த்தை - விசா கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமா?

    2 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, இன்று அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேசுகிறார்.
    வாஷிங்டன்:

    பிரதமர் நரேந்திர மோடி போர்ச்சுக்கல், அமெரிக்கா, நெதர்லாந்து நாடுகளுக்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.

    முதலில் அவர் போர்ச்சுக்கல் நாட்டுக்கு நேற்று முன்தினம் (சனிக்கிழமை) சென்றார். அங்கு அவர் லிஸ்பன் நகரில் பிரதமர் ஆன்டனியோ கோஸ்டாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அங்கு வாழும் இந்திய சமூகத்தினரையும் அவர் சந்தித்து கலந்துரையாடினார்.

    அதைத் தொடர்ந்து அவர் போர்ச்சுக்கல் பயணத்தை முடித்துக்கொண்டு, 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று அமெரிக்க நாட்டின் தலை நகர் வாஷிங்டனுக்கு ‘ஏர் இந்தியா-1’ விமானத்தில் போய்ச்சேர்ந்தார்.



    அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற பிறகு, பிரதமர் நரேந்திர மோடி அங்கு பயணம் மேற்கொண்டிருப்பது இதுவே முதல் முறை என்பதால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

    வாஷிங்டன் ஆண்ட்ரூஸ் விமானப்படை தளத்தில் போய்ச் சேர்ந்த போது, அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நவ்தேஜ் சர்னா மற்றும் அமெரிக்க அதிகாரிகள் அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளித்தனர். அவர்களுடன் பிரதமர் மோடி கைகுலுக்கி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டார்.

    முன்னதாக பிரதமர் மோடியை வரவேற்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், டுவிட்டரில் செய்தி வெளியிட்டிருந்தார். அதில் அவர், “இந்திய பிரதமர் மோடியை திங்கட்கிழமை (இன்று) வெள்ளை மாளிகையில் வரவேற்பதற்கு ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். ஒரு உண்மையான நண்பருடன் முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க உள்ளேன்” என குறிப்பிட்டிருந்தார்.

    இதே போன்று அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளி எம்.பி., கமலா ஹாரிசும் மோடியை வரவேற்று செய்தி வெளியிட்டிருந்தார்.

    வரவேற்பு முடிந்ததும் பிரதமர் மோடி நேராக வில்லார்டு இன்டர்கான்டினெண்டல் ஓட்டலுக்கு சென்றார். அங்கு அவரை வரவேற்பதற்காக இந்தியர்கள் கூடி நின்றனர். அவரைப் பார்த்ததும் அவர்கள் உற்சாகத்தில் “மோடி... மோடி....” என்று கூறினர்.

    பிரதமர் மோடி காரில் இருந்து இறங்கியதும், அவர் களை நோக்கி சென்றார். அவர்களுடன் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.



    வாஷிங்டனில் முதல் நிகழ்ச்சியாக அமெரிக்க தொழில் அதிபர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். வட்டமேஜை மாநாடு போன்று நடந்த இந்த சந்திப்பில் டிம் குக் (ஆப்பிள் நிறுவனம்), டக் மெக்மில்லன் (வால்மார்ட்), ஜிம் அம்பிள்பை (கேட்டர்பில்லர்), சுந்தர் பிச்சை (கூகுள்), சத்யநாதெள்ளா (மைக்ரோசாப்ட்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மேலும் அர்னி சோரன்சன் (மேரியாட் இன்டர்நேஷனல்), அலெக்ஸ் கார்ஸ்கை (ஜான்சன் அண்ட் ஜான்சன்), அஜய் பங்கா (மாஸ்டர் கார்டு), சார்லஸ் கயே (வார்பர்க் பிங்கஸ்), டேவிட் ரூபன்ஸ்டெயின் (கார்லைல்) உள்ளிட்டவர்களும் பங்கேற்றனர்.

    ‘மேக் இன் இந்தியா’ திட்டம் (‘இந்தியாவில் தயாரிப்போம்’) பற்றி எடுத்துக்கூறிய மோடி, இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு உகந்த சூழல் நிலவுவதாக தெரிவித்தார். இந்தியாவில் தொழில் தொடங்குகிறபோது இந்தியா, அமெரிக்கா என இரு நாடுகளும் பலன் அடைய முடியும் என குறிப்பிட்டார்.

    இந்த சந்திப்பை தொடர்ந்து பிரதமர் மோடி வெர்ஜினியா புறநகருக்கு சென்றார். அங்கு இந்திய வம்சாவளியினர் வரவேற்பு அளித்தனர்.

    600-க்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அவர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசினார். அப்போது இந்திய, அமெரிக்க நல்லுறவு குறித்து பெருமிதம் தெரிவித்தார்.

    இன்று பிரதமர் மோடி, அமெரிக்க ஜனாதிபதியின் அதிகாரபூர்வ மாளிகையான வாஷிங்டன் வெள்ளை மாளிகைக்கு செல்கிறார். அங்கு அவரை ஜனாதிபதி டிரம்ப் வரவேற்கிறார்.

    இரு தலைவர்களும் சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இரு தலைவர்களும் இப்படி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவது இதுவே முதல் முறையாகும்.

    5 மணி நேரம் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிற இந்த சந்திப்பு, இந்தியாவிலும், அமெரிக்காவிலும் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் ‘எச்-1பி’ விசா வழங்குவதில் புதிதாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து இந்திய தகவல் தொழில் நுட்பத்துறையினர் மத்தியில் எழுந்துள்ள கவலை குறித்து டிரம்பிடம் பிரதமர் மோடி எடுத்துக்கூறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய, அமெரிக்க இரு தரப்பு உறவினை வலுப்படுத்தும் அம்சங்கள் குறித்தும் இரு தலைவர்களும் முக்கியமாக விவாதிக்க உள்ளனர்.

    இந்தியாவுக்கு அமெரிக்கா ஆளில்லா உளவு விமானங்களை (22 எண்ணிக்கை) விற்பனை செய்வதற்கான அறிவிப்பை மோடியுடனான சந்திப்பின்போது ஜனாதிபதி டிரம்ப் வெளியிடுகிறார்.

    இந்த சந்திப்பின்போது பிரதமர் மோடிக்கு டிரம்ப் விருந்து அளித்து கவுரவிக்கிறார்.

    அப்போது இந்தியா வருமாறு, ஜனாதிபதி டிரம்புக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுப்பார் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    பிரதமர் மோடியும், டிரம்பும் கூட்டாக நிருபர்களை சந்திக்க மாட்டார்கள் என்றபோதிலும், இருவரும் தனித் தனியாக அறிக்கை வெளியிடுவார்கள் என தகவல்கள் கூறுகின்றன.

    அமெரிக்காவில் 2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு அங்கிருந்து மோடி இன்று (திங்கட்கிழமை) நெதர்லாந்து நாட்டுக்கு செல்கிறார். 
    Next Story
    ×