search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்காளதேசத்தில் லாரி கவிழ்ந்து விபத்து: ரம்ஜான் பண்டிகைக்காக சொந்த ஊர் சென்ற 16 பேர் பரிதாப பலி
    X

    வங்காளதேசத்தில் லாரி கவிழ்ந்து விபத்து: ரம்ஜான் பண்டிகைக்காக சொந்த ஊர் சென்ற 16 பேர் பரிதாப பலி

    வங்காளதேசத்தில் இன்று சிமெண்ட் மூட்டைகள் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் ரம்ஜான் பண்டிகைக்காக சொந்த ஊர் செல்லவிருந்த 16 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    டாக்கா:

    முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக வசிக்கும் வங்காளதேசத்தில், நாளை மறுநாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதன் பொருட்டு, பல்வேறு நகரங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்வதற்காக பேருந்து மற்றும் ரெயில் நிலையங்களில் குவிந்து வருகின்றனர். கூட்ட நெரிசல் இருப்பதால், எப்படியாவது ஊருக்கு போய் சேர்ந்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் ரெயில் மற்றும் பஸ்களின் கூரையில் அமர்ந்து ஆபத்தான பயணம் செய்கின்றனர்.

    பலர் குறைந்த செலவில் ஊருக்கு செல்லலாம் என்று சரக்கு லாரிகளில் தொற்றிக்கொண்டு சொந்த ஊருக்கு பயணமாகின்றனர். இந்நிலையில், அந்நாட்டின் வடமேற்கு நகரமான ராம்பூரில் இன்று சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி சென்றுள்ளது. லாரியில் கூலித் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல ஏறியுள்ளனர்.

    சாலையின் வளைவில் லாரி திரும்பும் போது அங்கிருந்த சிறிய பள்ளத்தில் இறங்கியது. இதனால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி திடீரென கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரியிலிருந்த 11 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

    இந்த கோர விபத்தில் பலியானவர்களின் 10 வயது சிறுமி உள்ளிட்ட 4 பெண்கள் அடக்கம். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×