search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரெக்ஸிட் பேச்சுவார்த்தை: பிரெசெல்ஸ் நகரில் மீண்டும் தொடங்கியது
    X

    பிரெக்ஸிட் பேச்சுவார்த்தை: பிரெசெல்ஸ் நகரில் மீண்டும் தொடங்கியது

    ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறும் விவகாரம் தொடர்பான பிரெக்ஸிட் பேச்சுவார்த்தை மீண்டும் பிரெசெல்ஸ் நகரில் தொடங்கியது.
    பிரெசெல்ஸ்:

    ஐரோப்பிய யூனியனைவிட்டு பிரிட்டன் வெளியேறுவது குறித்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் பொது வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மை மக்கள் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்து செல்வதற்கு ஆதரவாக வாக்களித்தனர். மேலும் பிரிட்டன் வெளியேறுவதற்கு ஆதரவாக அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

    பின்னர், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறும் விவகாரம் தொடர்பான பிரெக்ஸிட் பேச்சுவார்த்தைக்கு பல்வேறு கட்ட முயற்சிகள் நடைபெற்று வந்தது. ஆனால், பேச்சுவார்த்தை தொடங்கப்படாமலே இருந்தது.



    இதனிடையே, பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து பேச்சுவார்த்தை தொடங்குவது தள்ளி போனது. நாடாளுமன்ற தேர்தலில் பிரெக்ஸிட் விவகாரம் எதிரொலித்தது. பிரதமர் தெரசா மே அதிக இடங்களை பிடித்த போதும், பெரும்பான்மை பெற முடியாமல் போனது. இருப்பினும், தெரசா மே கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளார்.

    பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறும் விவகாரம் தொடர்பான பிரெக்ஸிட் பேச்சுவார்த்தை இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. பெல்ஜியம் தலைநகர் பிரெசெல்ஸில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. பேச்சுவார்த்தையில் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய யூனியன் சார்பில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இது தொடர்பாக பிரெக்ஸிட் செயலாளர் டேவிட் டேவிஸ் கூறுகையில், “பேச்சுவார்த்தைக்குள் நேர்மறையான, ஆக்கப்பூர்வமான மனநிலையோடு செல்கிறேன்” என்றார்.

    குடியேறுபவர்களின் நிலை, பிரிட்டனின் விவாகரத்து மசோதா மற்றும் வடக்கு அயர்லாந்தின் எல்லை உள்ளிட்ட அம்சங்கள் குறித்து பேசப்படுகிறது.

    Next Story
    ×