search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மயிலம் அருகே தொழில் அதிபர் வீட்டில் ரூ.12½ லட்சம் நகை கொள்ளை
    X

    மயிலம் அருகே தொழில் அதிபர் வீட்டில் ரூ.12½ லட்சம் நகை கொள்ளை

    தொழில் அதிபர் வீட்டின் பின்பக்க கதவை மர்ம நபர்கள் கள்ளச்சாவி மூலம் திறந்து ரூ. 12½ லட்சம் மதிப்புள்ள நகையை கொள்ளையடித்து சென்றனர்.

    மயிலம்:

    விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள தென்பசார் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 44). இவரது தம்பி பிரசன்னகுமார் (36). இவர்கள் அதே பகுதியில் சொந்தமாக ரைஸ்மில் வைத்துள்ளனர்.

    தற்போது செந்தில்குமார் திண்டிவனத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அங்கிருந்து தினமும் தென்பசாரில் உள்ள தனது ரைஸ்மில்லுக்கு வருவார்.

    பிரசன்னகுமார் தனது மனைவி சாந்தியுடன் தென்பசாரில் உள்ள தனது அண்ணன் வீட்டில் வசித்து வந்தார். செந்தில்குமாருக்கு சொந்தமான நகை மற்றும் பொருட்கள் பிரசன்னகுமார் குடியிருந்த வீட்டில் வைக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு பிரசன்னகுமார் தனது மனைவியுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில் மர்ம மனிதர்கள் அங்கு வந்தனர். அவர்கள் வீட்டின் பின்பக்க கதவை கள்ளச்சாவி மூலம் திறந்து வீட்டுக்குள் புகுந்தனர்.

    அவர்கள் அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 60 பவுன் நகைகள் மற்றும் 400 கிராம் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்தனர்.

    பின்னர் கொள்ளையடித்த பொருட்களுடன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இன்று காலை வீட்டின் பின்பக்க கதவு திறக்கப்பட்டு இருப்பதை கண்டு பிரசன்னகுமார் அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்தார். அங்கு பீரோ உடைக்கப்பட்டு, பொருட்கள் அனைத்தும் ஆங்காங்கே சிதறி கிடந்ததை கண்டார். அப்போது மர்ம மனிதர்கள் பீரோவில் இருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

    கொள்ளை போன நகைகளின் மொத்த மதிப்பு ரூ.12½ லட்சம் ஆகும். இந்த நகைகள் செந்தில்குமாருக்கு சொந்தமானது.

    இது குறித்து மயிலம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பால்சுதர், சப்- இன்ஸ்பெக்டர் சசிகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டனர்.

    விழுப்புரத்தில் இருந்து கைரேகை நிபுணர் தாமோதரன் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த ரேகைகள் சேகரித்தார். போலீஸ் மோப்ப நாய் ‘ராக்கி’ வீட்டில் மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் ஓடி சென்றது. ஆனால், யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    இது குறித்த புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை தேடி வருகின்றனர்.

    இந்த கொள்ளை சம்பவம் மயிலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×