search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆம்புலன்சில் மனு கொடுக்க வந்த மூதாட்டி நல்லமணி.
    X
    ஆம்புலன்சில் மனு கொடுக்க வந்த மூதாட்டி நல்லமணி.

    ரூ. 15 லட்சம் கடனுக்கு 95 லட்சம் கேட்டு மிரட்டல்: ஆம்புலன்சில் வந்து கலெக்டரிடம் மூதாட்டி மனு

    தாராபுரம் அருகே ரூ. 15 லட்சம் கடனுக்கு 95 லட்சம் கேட்டு மிரட்டல் விடுப்பதாக ஆம்புலன்சில் வந்து கலெக்டரிடம் மூதாட்டி அளித்துள்ள மனு குறித்து டி.எஸ்.பி. விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
    திருப்பூர்:

    தாராபுரம் அண்ணா நகரை சேர்ந்தவர் நல்லமணி (87) என்ற மூதாட்டி ஆம்புலன்சில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அவருடன் மருமகள் ஜான்சிராணி, பேரன் கெவின் ஆகியோரும் வந்தனர்.

    பின்னர் நல்லமணி 4 சக்கர நாற்காலியில் சென்று கலெக்டரிடம் புகார் மனு அளித்தார். அதில் கூறி இருப்பதாவது:

    எனது மகன் ஜவகர் சீனிவாசனுக்கு தொழில் நஷ்டம் மற்றும் அதிகப்படியான செலவு காரணமாக கடன் ஏற்பட்டது. இதனால் நல்லம் பாளையத்தை சேர்ந்த தங்கராஜ், பொன்னிவாடியை சேர்ந்த முத்துசாமி ஆகியோரிடம் எனது மகன் கடன் கேட்டுள்ளார்.

    அதற்கு அவர்கள் எனது பெயரில் உள்ள வீட்டு பத்திரத்தை அடமானமாக கேட்டுள்ளனர். அவசரமான நிலை என்பதால் வீட்டு பத்திரத்தை வைத்து கடந்த 2009-ம் ஆண்டு ரூ. 15 லட்சம் கடன் வாங்கினோம்.

    இந்த நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு எனது வீட்டின் மின்சார கட்டண ரசீது, வீட்டு வரி, குடிநீர் கட்டணம் ஆகியவை தங்கராஜ் பெயரில் வந்ததால் அதிர்ச்சி அடைந்தோம்.

    எங்களின் சூழ்நிலையை பயன்படுத்தி ரூ. 1 கோடி மதிப்புள்ள எனது வீட்டை ஏமாற்றி அவர் பெயரில் கிரையம் செய்து மோசடி செய்திருப்பது தெரிய வந்தது.

    இதனால் தங்கராஜூக்கும் எனது மகனுக்கும் தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் எனது மகன் கடந்த ஜூலை மாதம் இறந்து விட்டார்.

    இப்போது நான், எனது மருமகள், பேரன் ஆகியோர் ஆதரவின்றி தவிக்கிறோம். எனது வீட்டை காலி செய்யும் படி தங்கராஜ் மிரட்டுகிறார். ரூ. 15 லட்சம் பணத்துக்கு கந்து வட்டி போட்டு தற்போது ரூ. 95 லட்சம் திருப்பி கொடுக்க வேண்டும் என்கிறார். அவர் எங்களிடம் பணம் கேட்டு பேசுவதை வீடியோவில் பதிவு செய்து உள்ளோம்.

    அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.

    இது குறித்து தாராபுரம் டி.எஸ்.பி. விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி டி.எஸ்.பி. விசாரணை நடத்தி வருகிறார்.


    Next Story
    ×