search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அ.தி.மு.க.வை அழிக்க சதி- தினகரன் குற்றச்சாட்டு
    X

    அ.தி.மு.க.வை அழிக்க சதி- தினகரன் குற்றச்சாட்டு

    ஜெயலலிதா வீட்டில் நடந்த வருமான வரி சோதனையில் ஆதாரங்கள் உள்ளதாக கூறுவது அ.தி.மு.க.வை அழிக்க உச்சக்கட்ட சதி என்று டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.

    தஞ்சாவூர்:

    அ.தி.மு.க. (அம்மா அணி) துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தஞ்சையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அவர் அளித்த பதிலும் வருமாறு:-

    கேள்வி:-சசிகலாவை பாதுகாக்க ஜெயலலிதா தவறிவிட்டார் என்று மன்னார்குடியில் திவாகரன் கூறியிருப்பதை பற்றி?

    பதில்: ஜெயலலிதாவுடன் 33 ஆண்டுகள் கூடவே இருந்தவர் சசிகலா. சசிகலா சகோதரி என்ற ஆதங்கத்தில் திவாகரன் அவ்வாறு பேசியுள்ளார். இதை பெரிது படுத்த வேண்டாம். இது ஜெயலலிதாவை தாக்கி பேசியதாக அர்த்தம் இல்லை. உணர்ச்சிவசப்பட்டு பேசியுள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார். பின்னர் மேலும் தொடர்ந்து கூறியதாவது:-

    ஜெயலலிதா வீட்டில் நடந்த வருமான வரி சோதனையின் போது ஆடிட்டர் குருமூர்த்தி லேப்-டாப், பென் டிரைவ் சிக்கியுள்ளதாக கூறியுள்ளார். அதாவது செயல்படாத கம்ப்யூட்டர், 5 பென் டிரைவ் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. ஆனால் பென் டிரைவில் ஆதாரங்கள் உள்ளதாக கூறுவது அ.தி.மு.க.வை அழிக்கக்கூடிய உச்சக்கட்ட சதி ஆகும். பென் டிரைவில் ரகசியம் இருக்கும் என்று எவ்வாறு சொல்ல முடியும்?

    அம்மா இருக்கும் திசை நோக்கி வணங்கியவர்கள் எல்லாம் இப்போது போயஸ் பக்கம் போகவே பயப்படுகிறார்கள்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி, என்னை பார்த்து கட்சியில் எங்கு இருக்கிறார்? என்று கேட்கிறார். எங்களால் பதவிக்கு வந்த எடப்பாடி மற்றும் அவரோடு இருப்பவர்கள் தங்களை காப்பாற்றி கொள்ளவும், எதிலும் மாட்டாமல் இருக்கவும் இதுபோல் கூறி வருகிறார்கள். முதல்வர் பதவிக்குரிய தகுதி இல்லாமல் பிதற்றுகிறார்.

    எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜெயலலிதாவுக்கு சசிகலாவும், நானும் தான் மெய்காப்பாளர்கள். நான் ஜெயலலிதாவை மகனாக இருந்து பாதுகாத்தேன்.

    பெரா வழக்கு போன்ற வழக்குகள் நடந்த போது, ஜெயலலிதா என்னை அரசியலுக்கு கொண்டு வந்தார். பெரிய குளம் தொகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். ஜெயலலிதா பேரவை செயலாளராக நியமிக்கப்பட்டேன்.

    பா.ஜனதாவில் இருந்து அ.தி.மு.க.வுக்கு வந்த மைத்ரேயன்கூட ஜெயலலிதா வீட்டில் நடந்த சோதனைக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். ஆனால் எடப்பாடி எதுவும் தெரிவிக்கவில்லை. ஜெயலலிதா அரசு என கூறிக்கொள்ள இவர்களுக்கு எந்த தகுதியும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×