search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துறையூர் அடுத்த நாகலாபுரத்தில் இறந்தவர் உடலை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்ட உறவினர்கள் மற்றும் பொதுமக்கள்.
    X
    துறையூர் அடுத்த நாகலாபுரத்தில் இறந்தவர் உடலை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்ட உறவினர்கள் மற்றும் பொதுமக்கள்.

    திருச்சி அருகே இறந்தவர் உடலை சாலையில் வைத்து உறவினர்கள் மறியல்

    திருச்சி துறையூர் அருகே இறந்தவர் உடலை சாலையில் வைத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    துறையூர்:

    திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்துள்ள நாகலாபுரத்தை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 52), கூலித்தொழிலாளி. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர், கடந்த 8-ந்தேதி சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து அவரது உடல் சென்னையில் இருந்து நாகலாபுரத்திற்கு அவசர ஊர்தி மூலமாக கொண்டு வரப்பட்டது.

    அவசர ஊர்தியில் இறந்தவர் உடலை கொண்டு வரும் போது அவர் என்ன காரணத்தால் இறந்தார் என்று குறிப்பிட்டு சான்றிதழ் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் இறந்த திருநாவுக்கரசுக்கு வழங்கப்பட்ட சான்றிதழில் காய்ச்சல் என்பதற்கு பதிலாக ஆஸ்துமா என்று தவறாக குறிப்பிட்டு சான்றிதழ் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனை கண்டித்து திருநாவுக்கரசின் உறவினர்கள், அவரது உடலை மயானத்திற்கு கொண்டு செல்லாமல் நாகலாபுரத்தில் இருந்து பெரம்பலூர் செல்லும் சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் துறையூரில் இருந்து பெரம்பலூர் செல்லும் வாகனங்களும், பெரம்பலூரில் இருந்து துறையூர் வரும் வாகனங்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

    இது குறித்து தகவல் அறிந்த துறையூர் போலீசார் மற்றும் தாசில்தார் சந்திரகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதால், சாலை மறியலை கைவிட்டு திருநாவுக்கரசின் உறவினர்கள் அவரது உடலை எடுத்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    Next Story
    ×